கணவன் வெளிநாட்டில் இருந்தால் விவாகரத்து வழக்குகளை வீடியோ கான்பரன்சிங் மூலம் விசாரிக்கலாம் : ஐகோர்ட் உத்தரவு
11/27/2014 4:27:38 PM
சென்னை: சென்னை ஐகோர்ட்டில், மூத்த வக்கீல் சுதா ராமலிங்கம் தாக்கல் செய்துள்ள பொதுநல வழக்கில் கூறியிருப்பதாவது:குடும்ப பிரச்னை தொடர்பாக குடும்பநல கோர்ட்களில் தொடரப்படும் வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. வெளியூரில் இருக்கும் நபர் வழக்கு விசாரணைக்கு வர முடியாத சூழ்நிலை ஏற்படும்போது, வழக்கு விசாரணை தாமதப்படுத்தப்படுகிறது. இதனால், வெளியூரில் இருக்கும் நபரை வீடியோ கான்பரன்சிங் மூலம் விசாரிக்க வேண்டும் என்று குடும்பநல கோர்ட் நீதிபதியிடம் கோரிக்கை விடுத்தோம்.
சென்னை ஐகோர்ட் கடந்த 2007ம் ஆண்டு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், வெளிநாடுகளில் உள்ளவர்களிடம் வீடியோ கான்பரன்சிங் மூலம் விசாரணை நடத்தி, பரஸ்பரம் விவாகரத்து வழக்குகளில் தீர்ப்பு வழங்கலாம் என்று கூறியுள்ளது. ஆனால், இந்த சுற்றறிக்கை குறித்து விவரம் குடும்பநல கோர்ட் நீதிபதிகளுக்கு தெரியவில்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இந்த மனுவை தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், நீதிபதி எம்.சத்தியநாராயணன் ஆகியோர் விசாரித்து பிறப்பித்த உத்தரவில், ‘சென்னையில் உள்ள முதன்மை மற்றும் கூடுதல் குடும்பநல கோர்ட்கள், விவாகரத்து மற்றும் பரஸ்பரம் விவாகரத்து வழக்குகளில் தொடர்புடைய கணவன், மனைவி வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் இருந்தால், அவர்களிடம் வீடியோ கான்பரன்சிங் மூலம் விசாரணை நடத்தலாம்’ என்று உத்தரவிட்டுள்ளனர்.