ஜனவரியில் அணை கட்டுவது உறுதி டெண்டர் விடும் பணி துவக்கம்: கர்நாடக அமைச்சர் பேட்டி
11/21/2014 4:12:34 PM
பெங்களூர்: கர்நாடக மாநிலம் மேகதாது அருகே அணைகள் கட்டும் பணி ஜனவரியில் தொடங்க உள்ளது. இதற்காக சர்வதேச அளவில் டெண்டர் விடுவது ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்று அம்மாநில நீர்வளத்துறை அமைச்சர் எம்.பி. பாட்டீல் கூறினார்.கர்நாடக மாநில நீர்வளத்துறை அமைச்சர் எம்.பி. பாட்டீல் இன்று அரசு முறை பயணமாக டெல்லி சென்றார். அங்கு அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: காவிரி நீர்பிடிப்பு பகுதியான மேகதாது அருகே இரு அணைகள் கட்ட கர்நாடக அரசு முடிவுசெய்துள்ளது.
காவிரியில் இருந்து வீணாகி வெளியேறும் தண்ணீரை தடுக்கவேண்டும் என்ற நோக்கத்திலும், இப்பகுதியிலிருந்து எடுக்கப்படும் தண்ணீரை பெங்களூர் உள்பட பல்வேறு இடங்களில் குடிதண்ணீருக்காக வினியோகிக்கவும், கர்நாடகாவில் அதிக அளவில் மின்தட்டுப்பாடு இருப்பதால் அதை சமாளிக்கவும் மேகதாது அருகே இரு அணைகளை கட்ட அரசு முடிவுசெய்தது. இதற்காக, இட ஆய்வு ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கான திட்ட அறிக்கை தயார் செய்து, மத்திய நதிநீர் பங்கீடு ஆணையத்தின் அனுமதிக்காக அனுப்பப்பட்டுள்ளது. மேலும், அணைகள் கட்டுவதற்காக சர்வதேச அளவில் டெண்டர் விடும் பணி துவங்கப்பட்டுள்ளது.
மத்திய நதிநீர் பங்கீடு ஆணையத்தின் அனுமதி மற்றும் அணைகள் கட்டும் பணியை மேற்கொள்ளும் நிறுவனம் தேர்வு செய்வது போன்றவை வரும் டிசம்பர் 31க்குள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேற்கண்ட பணிகள் அனைத்து முடிந்த பின்னர், 2015-ஜனவரியில் அணைகள் கட்டும் பணி தொடங்கப்பட உள்ளது. ஆனால், கர்நாடகாவின் தேவையை, தமிழக அரசு புரிந்துகொள்ளாமல், மேகதாது அருகே அணைகள் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறது. கர்நாடக அரசின் முயற்சியை எதிர்த்து, தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்வது தேவையற்றது. தமிழக அரசின் இந்த முயற்சி தோல்வியில்தான் முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.