பினாங்கு பிரகடனம் தொடர்பான மதிமுக பொதுக் கூட்டத்துக்கு அனுமதி வழங்க வேண்டும்: வைகோ வலியுறுத்தல்
11/21/2014 3:42:24 PM
சென்னை: மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று வெளியிட்ட அறிக்கை:நவம்பர் 27ம் தேதி, சென்னை தி.நகர் முத்துரங்கன் சாலையில் மதிமுக சார்பில், என் தலைமையில் ‘தியாகத் திருநாள் பினாங்கு பிரகடன விளக்கப் பொதுக் கூட்டம்’ என்ற தலைப்பில் பொதுக் கூட்டம் நடத்த அனுமதி கேட்டு, காவல் துறையினரிடம் முறைப்படி விண்ணப்பித்து இருந்தோம். ஆனால், கூட்டத்துக்கு அனுமதி கொடுக்க முடியாது, பொதுக்கூட்டம் நடத்தக்கூடாது என்று காவல் துறையினர் தெரிவித்து உள்ளனர். அனுமதி மறுப்பை எழுத்து மூலமாகத் தாருங்கள் என்று கேட்டதற்கு, அதுவும் தர முடியாது என்று காவல் துறையினர் கூறி உள்ளனர்.
அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா, தமிழக முதல்வராக இருந்த போது, சுதந்திரத் தமிழ் ஈழத்திற்கான பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் எனச் சட்டமன்றத்தில் நிறைவேற்றிய தீர்மானம் தான், பினாங்கில் நடைபெற்ற அனைத்துலகத் தமிழ் மாநாட்டில் அறிவித்த ‘பினாங்கு பிரகடனம்’ ஆகும். ஈழ விடுதலைப் போரில் தங்கள் இன்னுயிரை ஈந்தோருக்குப் புகழ் அஞ்சலி செலுத்துவது சட்டப்படி குற்றம் ஆகாது. அனுமதி அளிப்பதாகத் ஆரம்பத்தில் காவல் துறையினர் கூறியதால், பெரும் பொருள் செலவில் தேதி குறிப்பிட்டு சுவரொட்டிகள் அச்சிட்டு ஒட்டி இருக்கிறோம். எனவே, நவம்பர் 27ம் தேதி பொதுக்கூட்டத்திற்கு, காவல்துறை அனுமதி வழங்குமாறு தமிழக அரசு அறிவிக்க வேண்டுகிறேன்.