இலங்கை சிறையில் உள்ள 24 மீனவர்களின் காவல் டிசம்பர் 5 வரை நீட்டிப்பு
11/21/2014 3:24:21 PM
திருச்சி: புதுக்கோட்டை, நாகப்பட்டினம், ராமேஸ்வரம், காரைக்கால் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள் 24 பேர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கடந்த செப்டம்பர் 27, 30, அக்டோபர் 7 ஆகிய தேதிகளில் இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டு யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர். 24 பேரின் காவலும் இன்றுடன் நிறைவடைந்தது. இதையடுத்து 24 மீனவர்களும் இலங்கை ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களது காவலை வரும் டிசம்பர் 5ம் தேதி வரை நீட்டிப்பு செய்து கோர்ட் உத்தரவிட்டது. இதையடுத்து மீனவர்கள் 24பேரும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர். 5வது முறையாக மீனவர்களின் காவல் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது தமிழக மீனவர்களிடையே கவலை அளித்துள்ளது.
தமிழக மீனவர்களின் 79 விசைப்படகுகள், 3 நாட்டுப்படகுகள் என மொத்தம் 82 படகுகளை இலங்கை பறிமுதல் செய்துள்ளது. தற்போது மழை, காற்றால் 15க்கும் மேற்பட்ட படகுகள் சேதமடைந்துவிட்டது. சில நீரில் மூழ்கிவிட்டன. இதனால் படகை நம்பி பிழைப்பு நடத்தி வந்த ஆயிரக்கணக்கான மீனவர்கள் வாழ்வாதாரமின்றி தவித்து வருகின்றனர். மாற்று தொழிலுக்கும் வழியில்லாததால் மீனவ குடும்பங்கள் வறுமையில் வாடி வருகின்றன. 82 படகுகளையும் உடனடியாக மீட்டு தர மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். சேதமடைந்த படகுகளுக்கு நிவாரணம் பெற்றுத் தரவேண்டும். சிறையில் உள்ள 24 மீனவர்களையும் விடுதலைசெய்ய வேண்டும் என தமிழக மீனவர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.