தமிழக அரசின் செயல்பாடு கவலை அளிக்கிறது: தமிழிசை குற்றச்சாட்டு
11/21/2014 3:23:52 PM
சென்னை: பாஜ மீனவரணி சார்பில் ‘நமோ மீன் உணவு திருவிழா‘ மெரினா கடற்கரை அருகே இன்று காலை நடந்தது. விழாவுக்கு மாநில பாஜ மீனவரணி தலைவர் சதீஷ்குமார் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் செம்மலர் சேகர் முன்னிலை வகித்தார். விழாவுக்கு சிறப்பு விருந்தினராக தமிழக பாஜ தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டு, ஏழை, எளிய மக்களுக்கு சுமார் 100 கிலோ அளவிலான இலவச மீன்களை வழங்கினார். பின்னர், தமிழிசை நிருபர்களுக்கு அளித்த பேட்டி:இலங்கையில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட 5 மீனவர்கள், பிரதமர் நரேந்திரமோடி முயற்சியால் மீட்கப்பட்டு வீடு திரும்பி உள்ளனர். இது மீனவர்களுக்கு, உலக மீனவர்கள் தின வாழ்த்தாக அமைந்துள்ளது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, இந்திய வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜை மீனவ பிரதிநிதிகள் டெல்லியில் சந்தித்து பேசினர். அப்போது மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு ஊக்கமளிக்க வேண்டும், ஆழ்கடல் துறைமுகங்களை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
எவ்வளவு செலவானாலும் இந்த திட்டத்தை நிறைவேற்றுவதாக வெளியுறவு துறை அமைச்சர் உறுதியளித்துள்ளார். இலங்கையில் சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்கள் மற்றும் அவர்களின் படகுகளை மீட்க விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும். தமிழக அரசு செயல்பாடு கவலை அளிக்கும் வகையில் உள்ளது. எங்கு பார்த்தாலும், மோசமான சாலைகளாகவும், போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. கோடம்பாக்கத்தில் இருந்து மெரினா கடற்கரைக்கு வரவே சுமார் 2 மணி நேரம் ஆகிறது. அரசு போக்குவரத்துக் கழகங்களில் 200 பஸ்கள் முடங்கி கிடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. கச்சத் தீவை மீட்க தமிழக பாஜ தொடர்ந்து மத்திய அரசை வலியுறுத்தும். இது எந்தவித மாற்று கருத்தும் கிடையாது. இவ்வாறு அவர் கூறினார்.நிகழ்ச்சியில் தமிழக பாஜ துணைத் தலைவர்கள் வானதி சீனிவாசன், சக்கரவர்த்தி, மாவட்டத் தலைவர்கள் ஜெயசங்கர், காளிதாஸ், லலித் ஜெயின், மாநில மீனவரணி பொருளாளர் கொட்டிவாக்கம் மோகன் மற்றும் மாநில மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.