சேட்டை மாணவனை கண்டித்த ஆசிரியருக்கு அடி, உதை அடியாட்களை ஏவியவரை கைது செய்ய ஆசிரியர்கள், பெற்றோர்கள் திடீர் மறியல்: கோடம்பாக்கத்தில் பதற்றம்
11/21/2014 3:22:26 PM
சென்னை: பள்ளிக்குள் அடியாட்களை ஏவி ஆசிரியரை தாக்கியவரை கைது செய்யக் கோரி, பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் திடீர் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.கோடம்பாக்கத்தில் உள்ள பிரபல தனியார் பள்ளியில் உடற்பயிற்சி ஆசிரியராக பாஸ்கர்ராஜ் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இதே பள்ளியில் ரொனால்டு என்ற மாணவன் 8ம் வகுப்பு படித்து வருகிறான். இவனுடைய தந்தை அருளானந்தம், பிரபல தனியார் நிறுவனத்தின் உரிமையாளர். இந்நிலையில், அந்த மாணவன் நேற்று பள்ளி வளாகத்தில் விசில் அடித்ததாக கூறப்படுகிறது.
இதை தொடர்ந்து உடற்கல்வி ஆசிரியர் பாஸ்கர்ராஜ் மாணவனை அடித்ததாக கூறப்படுகிறது.இதையடுத்து மாணவன், நடந்த சம்பவம் குறித்து தனது பெற்றோருக்கு போன் மூலம் தகவல் தெரிவித்தான். இதனால் ஆத்திரமடைந்த அருளானந்தம், 50க்கும் மேற்பட்ட தனது ஆதரவாளர்களுடன் பள்ளிக்குள் அதிரடியாக புகுந்து உடற்கல்வி ஆசிரியரை தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.தாக்குதல் காட்சிகள் அனைத்தும் பள்ளியில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. ஆசிரியரை தாக்கிய ஆசாமிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளி நிர்வாகிகளும், மகனை தாக்கிய ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி அருளானந்தம் தரப்பிலும் கோடம்பாக்கம் காவல் நிலையத்தில் தனித்தனியாக புகார் அளிக்கப்பட்டது.
முதற்கட்டமாக உடற்கல்வி ஆசிரியர் பாஸ்கர்ராஜ் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதை தொடர்ந்து, ஆசிரியர் மீது தாக்குதல் நடத்தியதாக 17 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், அடியாட்களை ஏவி விட்ட அருளானந்தம் மீது நடவடிக்கை எடுக்க கோரி, ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் உள்பட நூற்றுக்கணக்கானோர் பள்ளி முன்பு திரண்டு இன்று ஆர்பாட்டம் நடத்தினர். கோடம்பாக்கம் பகுதியில் சாலை மறியலிலும் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நிலைமை மோசமானதை தொடர்ந்து போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் சம்பவம் இடம் விரைந்து வந்து சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதியளித்ததையடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது.