விடிவு காலம் பிறக்க மீண்டும் திமுக ஆட்சி: மதுரையில் மு.க.ஸ்டாலின் பேச்சு
11/21/2014 2:24:00 PM
மதுரை: தமிழகத்துக்கு விடிவு காலம் பிறக்க மீண்டும் கருணாநிதி தலைமையில் திமுக ஆட்சி ஏற்பட வேண்டும் என்று பொருளாளர் மு.க.ஸ்டாலின் பேசினார்.மதுரையில் நேற்று மாவட்ட திமுக பொது உறுப்பினர் கூட்டம் ஒத்தக்கடையில் நடந்தது. மாவட்ட செயலாளர் மூர்த்தி தலைமை வகித்தார். இதில், திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாக திமுக ஆய்வு கூட்டங்களில் பங்கேற்று வருகிறேன். இதுவரை 26 மாவட்டங்களில் ஆய்வு முடிந்துள்ளது. அடுத்து தேனி, நீலகிரி, சேலம், தர்மபுரி, தென் சென்னை, வட சென்னை மாவட்டங்களுடன் ஆய்வு முடிந்து விடும். இதன் மூலம் திமுகவில் முக்கிய பணியை முடித்த பெருமை அடைவேன். இது என் வாழ்நாளில் மறக்க முடியாதது.
தமிழகத்தில் 2011ல் ஜெயலலிதா ஆட்சி பொறுப்பை ஏற்றார். சட்டமன்றத்தில் 110வது விதியை பயன்படுத்தி ஏராளமான திட்டங்களை அறிவித்து கொண்டே இருந்தார். எதுவுமே நிறைவேறவில்லை. எல்லாமே ஏட்டளவிலேயே உள்ளன. சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற ஜெயலலிதா முதல்வர் பதவியை இழந்தார். தீர்ப்பு வந்ததும் அவரது காரில் இருந்த தேசிய கொடி கழற்றப்பட்டது. பெங்களூரு நீதிமன்ற வளாகத்தில் காத்திருந்த ஓ.பன்னீர்செல்வத்தை அழைத்து, முதல்வராக பதவி ஏற்றுக் கொள்ளுமாறு கூறினார்.பதவியேற்பு விழாவில் ஓ.பன்னீர்செல்வம், மற்ற அமைச்சர்கள் கவர்னர் முன்னிலையில் அழுது கண்ணீர் வடித்த நாடகமும் நடந்தது. முதல்வர் பதவி ஏற்றதும் போயஸ் கார்டன் சென்று ஜெயலலிதா படத்தின் காலில் விழுந்தார்.
அதன் பிறகு கோட்டைக்கு சென்றவர் முதல்வர் அறைக்கு செல்லவில்லை. அவர் முதலமைச்சராகவே செயல்படவில்லை. அதனால்தான் பினாமி முதலமைச்சர் என்கிறோம். முல்லை பெரியாறு, காவிரி பிரச்னைகளில் கேரளா, கர்நாடகத்தில் அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டம், சட்டமன்றத்தை கூட்டி விவாதிக்கிறார்கள். தமிழகத்திலும் அனைத்து கட்சி கூட்டம் நடத்தி விவாதிக்க வேண்டும். சட்டமன்றத்தை கூட்டி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். ஆனால் அனைத்து கட்சி கூட்டத்தையோ, சட்டமன்றத்தையோ கூட்டும் துணிச்சல், தைரியம் பினாமி முதல்வருக்கு இல்லை.
தர்மபுரி அரசு மருத்துவமனையில் 10க்கும் அதிகமான குழந்தைகள் பலியாகியும் முதலமைச்சர் நேரில் சென்று பார்க்கவில்லை. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர் கெட்டு, கொலை, கொள்ளை, பாலியல் பலாத்கார சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. பினாமி முதல்வர் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை. இதற்கெல்லாம் முடிவு கட்டி தமிழகத்திற்கு விடிவு காலம் பிறக்க மீண்டும் தலைவர் கருணாநிதி தலைமையில் திமுக ஆட்சி அமைய அனைவரும் சபதம் ஏற்போம். இவ்வாறு மு.க. ஸ்டாலின் பேசினார்.