நள்ளிரவில் சென்னை வருகை 5 மீனவரை வரவேற்பதில் பாஜ, அதிமுக போட்டி: விமான நிலையத்தில் பரபரப்பு: சொந்த ஊரில் உற்சாகம்
11/21/2014 2:13:47 PM
சென்னை: இலங்கையில் விடுதலையான தமிழக மீனவர்கள் 5 பேர் நேற்று டெல்லி வந்தனர். அங்கிருந்து நள்ளிரவில் சென்னை ஏர்போர்ட்டுக்கு வந்த அவர்களை வரவேற்பதில் பாஜ, அதிமுக இடையே போட்டி நிலவியதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில், இன்று மதியம் சொந்த ஊரான தங்கச்சிமடத்துக்கு சென்ற அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.கடந்த 2011ம் ஆண்டு போதை பொருள் கடத்தியதாக தொடரப்பட்ட வழக்கில், ராமேஸ்வரம் தங்கச்சிமடத்தை சேர்ந்த 5 மீனவர்களுக்கு இலங்கை உயர்நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது. பிரதமர் நரேந்திர மோடியின் முயற்சியால் அவர்கள் தூக்கு தண்டனையில் இருந்து விடுவிக்கப்பட்டனர். இதையடுத்து, அவர்கள் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் நேற்று மாலை 5.40 மணிக்கு டெல்லிக்கு அழைத்து வரப்பட்டனர்.
அவர்களை வரவேற்க தமிழக அரசின் சிறப்பு பிரதிநிதி ஜக்கையன் மற்றும் தமிழக அரசின் அதிகாரிகள் காத்திருந்தனர். ஆனால் மத்திய அரசு அதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள் செல்லும் வழியாக மீனவர்களை அழைத்து கொண்டு வெளியுறவு துறை அமைச்சக அலுவலகத்துக்கு சென்றனர். அங்கு முறைப்படி இந்திய வெளியுறவுத் துறை அமைச்சக அதிகாரிகளிடம் மீனவர்கள் ஒப்படைக்கப்பட்டனர்.பின்னர், 5 மீனவர்களுடன் மத்திய அரசு அதிகாரி செல்வகுமார், ஏர்இந்தியா விமானம் மூலம் நேற்றிரவு சென்னைக்கு புறப்பட்டனர். இதற்கிடையில், சென்னை வரும் மீனவர்களை வரவேற்பதற்காக தமிழக அமைச்சர்கள் வளர்மதி, சுந்தரராஜன், ஜெயபால் மற்றும் அரசு அதிகாரிகள் வந்தனர்.
பாஜ தரப்பில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், வானதி சீனிவாசன் மற்றும் நிர்வாகிகள் குவிந்தனர். நள்ளிரவு 12.50 மணிக்கு மீனவர்கள் வந்த விமானம் சென்னை வந்தது. ஏரோ பிரிட்ஜ் வழியாக வருவார்கள் என நினைத்து பாஜவினர் மேல் தளத்துக்கு சென்றனர். ஆனால் தமிழக அமைச்சர்கள், அதிகாரிகள் கீழே இருந்தனர்.விமானத்தை விட்டு இறங்கிய 5 மீனவர்களையும் விமான நிலைய அதிகாரிகள் நேராக கீழ் வழியாக அழைத்து வந்தனர். மீனவர்களுக்கு தமிழக அமைச்சர்கள் சால்வை அணிவித்து அரசு அறிவித்துள்ள ரூ.3 லட்சம் நிவாரண தொகையை வழங்கினர்.
மேல் பகுதியில் காத்திருந்த பாஜவினர், இந்த தகவல் அறிந்து கீழே வந்தனர். தமிழக அமைச்சர்கள் மீனவர்களை வரவேற்று கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். ‘பிரதமர் மோடியின் முயற்சியால் மீனவர்கள் விடுவிக்கப்பட்டு அழைத்து வரப்பட்டுள்ளனர். அவர்களை வரவேற்க நாங்கள் காத்திருக்கிறோம். ஆனால் எங்கள் பகுதிக்கு அழைத்து வராமல் கீழே எப்படி அழைத்து வரலாம்‘ என பாஜவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சிறிது நேரத்துக்கு பிறகு பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் பாஜகவினர் மீனவர்களை வரவேற்று சிற்றுண்டி அளித்தனர்.
இதையடுத்து, ‘சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் மீனவர்கள் தங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, அதனால் அங்கு அழைத்து செல்லலாம்‘ என தமிழக அரசு அதிகாரிகள் கூறினர். ஆனால் மத்திய அரசு அதிகாரி செல்வகுமார், ‘சொந்த ஊரில் ஒப்படைக்க சொல்லித்தான் எனக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது‘ என கூறி மறுத்து விட்டார். இதையடுத்து அதிகாலை 1.45 மணி வரையில் மீனவர்கள், விமான நிலையத்தை விட்டு வெளியே வர முடியால் இருந்தனர்.பின்னர் ஒரு வழியாக 5 மீனவர்களும் வெளியில் அழைத்து வரப்பட்டு வேனில் ராமேஸ்வரம் தங்கச்சி மடத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
அவர்களுடன் மத்திய அரசு அதிகாரி, தமிழக மீன்வளத்துறை ஆணையர் பியூலா ராஜேஷ் ஆகியோரும் சென்றனர். தங்கச்சிமடத்துக்கு இன்று மதியம் சென்ற மீனவர்களை உறவினர்கள், சங்கத்தினர் மற்றும் அரசியல் கட்சியினர் உற்சாகமாக வரவேற்றனர்.மத்திய, மாநிலஅரசுக்கு நன்றிமீனவர்கள் விமான நிலையத்தில் இருந்து வேனுக்கு அழைத்து வரப்பட்டபோது நிருபர்கள் பேட்டி எடுக்க முயன்றனர். ஆனால் போலீசாரும், அதிகாரிகளும் தடுத்தனர். பின்னர் ஒருவர் மட்டும், ‘தூக்கு தண்டனையில் இருந்து எங்களை பத்திரமாக மீட்ட மத்திய, மாநில அரசுகளுக்கு எங்களது மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறோம்‘ என்றார்.