துபாய் டெஸ்ட் போட்டி: பாகிஸ்தான் மந்தமான ஆட்டம்; முன்னிலையை நோக்கி நியூசி.
11/20/2014 2:13:28 PM
துபாய்: பாகிஸ்தான்-நியூசிலாந்து அணிகள் மோதும் 2வது டெஸ்ட் போட்டி துபாயில் நடந்து வருகிறது. முதல் இன்னிங்சில் நியூசிலாந்து அணி 403 ரன்கள் எடுத்தது. மூன்றாம் நாளான நேற்று பாகிஸ்தான் அணி 2 விக்கெட் இழப்புக்கு 34 ரன்கள் என்ற தங்களது முந்தைய நாள் ஸ்கோருடன் ஆட்டத்தைத் தொடர்ந்தது. நேற்று பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் மந்தமான ஆட்டத்தை வெளிப்படுத்தி னர். 322 நிமிடங்கள் களத்தில் இருந்த அசார் அலி 225 பந்துகளை எதிர்கொண்டு 75 ரன்கள் மட்டுமே எடுத்து சோதி பந்து வீச்சில் விக்கெட்டைப் பறி கொடுத்தார். இதே போல் யூனுஸ் கான் 160 பந்துகளை எதிர் கொண்டு 72 ரன்களைச் சேகரித்தார்.
அவர் நீஷம் பவுலிங்கில் கிரெய்கிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.கேப்டன் மிஸ்பா உல் ஹக் 28 ரன்கள் எடுத்த போது போல்ட் பந்து வீச்சில் டெய்லரிடம் கேட்ச் கொடுத்தார். 73 பந்துகளில் 44 ரன்கள் எடுத்த ஆசாத் ஷபீக்கை சவுத்தி வெளியேற்றினார். சர்பிராஸ் அகமது 28 ரன்களுடனும், யாசிர் ஷா 1 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர். ஆட்ட நேர இறுதியில் பாகிஸ் தான் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 281 ரன்களை எடுத்திருந்தது. 122 ரன்கள் பின்தங்கியுள்ள நிலையில் 4 விக்கெட்டுகள் மட்டுமே பாகிஸ்தான் கைவசமுள்ளதால், நான்காம் நாள் ஆட்டத்தில் இன்று மீதமுள்ள விக்கெட்டுகளை விரைவில் வீழ்த்தும் பட்சத்தில் நியூசிலாந்து முதல் இன்னிங்சில் முன்னிலை பெறும் வாய்ப்பு உருவாகியுள்ளது.