போலீஸ் டார்ச்சரால் காவலாளி தற்கொலை காவல் நிலையத்தில் சடலத்துடன் உறவினர்கள் முற்றுகை
திருவள்ளூர்: போலீஸ் டார்ச்சரால் காவலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறி உறவினர் மற்றும் புரட்சி பாரதம் கட்சியினர் இறந்தவர் சடலத்தை போலீஸ் நிலையம் முன்பு வைத்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். பூந்தமல்லி அருகே வெள்ளவேட்டில் நள்ளிரவில் நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. பூந்தமல்லியை அடுத்த குத்தம்பாக்கம் வடக்குபகுதியை சேர்ந்தவர் தினகரன் (45), தனியார் குளிர்பான கம்பெனியில் காவலாளியாக இருந்தார். இவரது மனைவி செல்வி (40). தம்பதியின் மகன் வேல் முருகன் (25). நேற்று தினகரன் கம்பெனியில் பணியில் இருந்துள்ளார். இரவு 11 மணியளவில் மகனுக்கு போன் செய்து கம்பெனிக்கு வரும்படி கூறிவிட்டு செல்போனை துண்டித்து விட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த வேல்முருகன் கம்பெனிக்கு வந்துள்ளார். அங்கிருந்த மற்ற காவலாளியிடம் அப்பா எங்கே என்று கேட்டுள்ளார். கம்பெனியில் தேடி பார்த்தபோது அங்குள்ள மரத்தில் தினகரன் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்தார். உடனே அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதனை செய்த டாக்டர் தினகரன் இறந்து விட்டதாக தெரிவித்தார்.
தகவல் அறிந்ததும் தினகரன் மனைவி மற்றும் உறவினர்கள் புரட்சி பாரத கட்சியினர் ஆஸ்பத்திரிக்கு திரண்டு வந்தனர். அங்கிருந்து தினகரன் சடலத்தை பெற்று நள்ளிரவு 1.30 மணியளவில் வெள்ளவேடு போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். போலீஸ் நிலையம் முன்பு சடலத்தை கிடத்தி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து இறந்த தினகரன் உறவினர்கள் கூறுகையில், தினகரனின் அக்காவுக்கு சொந்தமான நிலம் சென்னீர் குப்பத்தில் உள்ளது. இந்த நிலத்தை குத்தம்பாக்கம் வெங்கடேசன் என்பவர் விலை பேசியுள்ளார். நிலத்திற்கு அட்வான்ஸ் ரூ. 2 லட்சத்தை தினகரனிடம் கொடுத்துள்ளார். திடீரென்று நிலம் வேண்டாம் என்று கூறி பணத்தை திரும்ப கேட்டுள்ளார். இதில் தகராறு இருந்துள்ளது. இதுகுறித்து வெங்கடேசன் வெள்ளவேடு போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் தினகரனை அழைத்து டார்ச்சர் செய்துள்ளனர். இதனால் தினகரன் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார் என்றனர். தகவல் அறிந்ததும் திருவள்ளூர் எஸ்பி ரூபேஷ் குமார் மீனா, டிஎஸ்பி பாலசந்தர் மற்றும் போலீசார் விரைந்து வந்தனர். விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதில் சமாதானம் அடைந்த மக்கள் கலைந்து சென்றனர். போலீஸ் நிலையம் முன்பு இருந்த தினகரன் சடலத்தை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் புரட்சி பாரதம் கட்சினர் இன்று போராட்டம் நடத்தலாம் என முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெள்ளவேடு போலீஸ் நிலையம், வெள்ளவேடு சாலை, குத்தம்பாக்கம், திருவள்ளூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 9/10/2025 4:05:07 PM
-Updated 9/10/2025 4:02:04 PM
-Updated 9/10/2025 3:16:22 PM
-Updated 9/10/2025 3:09:52 PM
-Updated 9/10/2025 2:48:23 PM
-Updated 9/10/2025 2:48:04 PM
-Updated 9/10/2025 2:47:55 PM
-Updated 9/9/2025 3:39:18 PM
-Updated 9/9/2025 3:38:25 PM
-Updated 9/9/2025 3:36:03 PM
-Updated 9/9/2025 3:35:39 PM
-Updated 9/8/2025 2:38:12 PM
-Updated 9/8/2025 2:37:56 PM
-Updated 9/8/2025 2:28:47 PM
-Updated 9/8/2025 12:34:14 PM