சேலம்: புதிய ஓய்வூதிய திட்டத்தில் உள்ள 4.23 லட்சம் அரசு ஊழியர் குடும்பங்களின் ஓட்டு யாருக்கு என்ற கேள்வி எழுந்துள்ளது.தமிழகத்தில் கடந்த அதிமுக ஆட்சியின் போது பணியில் சேர்ந்த நான்கு லட்சத்து, 23 ஆயிரத்து 441 அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், புதிய ஓய்வூதிய திட்டத்தில் சேர்க்கப்பட்டனர். ஊழியர்களிடம் வசூலித்த தொகை மற்றும் அரசின் பங்கு தொகை என ரூ.8,543 கோடியை ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மேம்பாட்டு ஆணையத்திடம் தமிழக அரசு செலுத்தவில்லை. இதனால், பணியின்போது இறந்த ஊழியர்களுக்கு பணப்பலன் கிடைக்கவில்லை.
நீதிமன்றம் மூலமே சிலர் பலன் பெற்றனர். கடந்த 2011 சட்டமன்றத் தேர்தலின் போது ‘நாங்கள் ஆட்சிக்கு வந்தால், புதிய ஓய்வூதிய திட்டம் ரத்து செய்யப்படும்,’ என அ.தி.மு.கவின் தேர்தல் அறிக்கையில் ெதரிவிக்கப்பட்டது. ஆட்சிக்கு வந்த பின்பு இதற்கான எந்த முயற்சியும் எடுக்கவில்லை. அதிருப்தி அடைந்த ஊழியர்கள் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால், ‘புதிய ஓய்வூதிய திட்டம் குறித்து, ஆய்வு செய்ய வல்லுனர் குழு அமைக்கப்படும்’ என, முதல்வர் அறிவித்தார். ஆனால், அரசாணை வெளியிடவில்லை. இதனால் அரசு ஊழியர், ஆசிரியர்கள் அதிருப்தியில் உள்ளனர். இதனால் பாதிக்கப்பட்ட 4.23 லட்சம் அரசு ஊழியர்களின் ஓட்டு யாருக்கு என்ற கேள்வி எழுந்துள்ளது.
இது குறித்து அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள் கூறியதாவது: பயனாளிகளிடமிருந்து பிடிக்கப்படும் 10 சதவீதத் தொகையோடு, அரசு 10 சதவீத தொகையை சேமிப்பு கணக்கில் சேர்க்கும். இவ்வாறு ேசமிக்கப்படும் முழுத் தொகை ஓய்வு ெபறும் போது மொத்தமாக வழங்கப்படும் என்பது தான் புதிய ஓய்வூதியத்திட்டமாகும். இந்த திட்டத்தை கொண்டு வந்த அதிமுக அரசு, ஓய்வுநிதி ஒழுங்காற்று ஆணையத்திற்கு தனது பங்குத் தொகையை செலுத்தவில்லை. இதனால் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள், ஆயிரக்கணக்கானோர், சேமிப்புத் தொகை கிடைக்காமல் பரிதவித்து நிற்கின்றனர்.
இதில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இறந்து விட்டனர். பழைய ஓய்வூதியத்திட்டத்தில் உள்ளவர்களுக்கு இதர பணப்பலன்களோடு சாகும் வரை ஓய்வூதியம் கிடைக்கும். பயனாளிக்கு பிறகு அவரது வாரிசுதாரரருக்கும் கிடைக்கும்.புதிய ஓய்வூதிய திட்டத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் வாக்கு யாருக்கு கிடைக்கும் என்பது புதிராக இருந்தாலும், நிச்சயமாக அதிமுகவிற்கு கிடைக்காது என்பது மட்டும் உண்மை. இவ்வாறு அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.