கவுகாத்தி: அசாம் முதல்வர் தருண் கோகாய் மற்றும் அவரது மனைவி டோலி ஆகியோரின் சொத்து மதிப்பு சுமார் ரூ.5 கோடி என தெரிவித்துள்ளனர்.அசாமில் முதல்வர் தருண் கோகாய் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி கடந்த 15 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. தற்போது நான்காவது முறையாக திட்டபார் தொகுதியில் போட்டியிட தருண் கோகாய் மனு தாக்கல் செய்துள்ளார். மனுவுடன் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் தனது மற்றும் குடும்பத்தினரின் சொத்து விவரங்களை வெளியிட்டுள்ளார். அதில் தருண் கோகாய் மற்றும் அவரது மனைவி டோலி கோகாய் ஆகியோரின் அசையும் சொத்து மதிப்பு ரூ.99 லட்சத்து 83 ஆயிரத்து 739 என குறிப்பிடப்பட்டுள்ளது.
பாஜ சார்பில் போட்டியிடும் முதல்வர் வேட்பாளரும், மத்திய அமைச்சருமான சர்வானந்த சோனாவால் அசையும் சொத்து மதிப்பு ரூ.70 லட்சத்து 44 ஆயிரத்து 919 என குறிப்பிடப்பட்டுள்ளது. சோனாவால் திருமணமாகாதவர் என்பது குறிப்பிடத்தக்கது. தருண் கோகாயின் அசையும் சொத்துகளின் மதிப்பு ரூ.49 லட்சத்து 95 ஆயிரத்து 022. அவரது மனைவி டோலியின் அசையும் சொத்துகளின் மதிப்பு ரூ.49 லட்சத்து 88 ஆயிரத்து 717 என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் வங்கி கணக்கில் உள்ள பணம், இன்சூரன்ஸ் பாலிசிகள், அஞ்சலக சேமிப்புகள், பங்கு பத்திரங்கள் உள்ளிட்டவையும் அடங்கும்.
பாஜ முதல்வர் வேட்பாளரான சோனாவால் மஜூலி தொகுதியில் போட்டியிடுகிறார். இவரது அசையும் சொத்தின் மதிப்பு ரூ.70 லட்சத்து 44 ஆயிரத்து 919. இவருக்கு வங்கியில் மட்டும் ரூ12 லட்சத்திற்கும் அதிகமான பணம் டெபாசிட்டில் உள்ளது. அதே போல் இந்தியன் ஆயில் நிறுவனத்தில் ரூ.8 லட்சத்து 77 ஆயிரத்து 500 பங்கு வைத்துள்ளார்.தருண் கோகாய் மற்றும் டோலியின் டெல்லி மற்றும் கவுகாத்தியில் உள்ள அசையா சொத்துகளின் மதிப்பு ரூ. 4 கோடியே 25 லட்சம் ஆகும். சோனாவாலின் அசையா சொத்தின் மதிப்பு ரூ.1 கோடியே 15 லட்சம் என்றும், கவுகாத்தி மற்றும் திப்ருகாரில் இவரது பரம்பரை சொத்து மற்றும் பரிசாக கிடைத்த சொத்துகளாகும்.
மேலும் தருண் கோகாய் மற்றும் டோலிக்கு சொந்தமாக கவுகாத்தியில் ரூ.75 லட்சம் மற்றும் ரூ.30 லட்சத்தில் நிலம் உள்ளது.மேலும் கவுகாத்தியில் பெல்டோலா என்ற இடத்தில் முதல்வருக்கு சொந்தமாக ரூ.1 கோடியே 15 லட்சத்தில் குடியிருப்பு கட்டிடம் ஒன்றும், டெல்லியில் உள்ள வசந்த் கஞ்ச் என்ற இடத்தில் ரூ. 2கோடியே 5 லட்சம் மதிப்பில் பிளாட் ஒன்றும் உள்ளது.சோனாவாலுக்கு பரம்பரை சொத்தாக திப்ருகாரில் இருக்கும் சொத்தின் மதிப்பு ரூ.30 லட்சம். கவுகாத்தியில் ஜோதி குச்சி என்ற இடத்தில் ரூ.30 லட்சத்தில் நிலம் உள்ளது. அதே போல் ரூ55 லட்சத்தில் குடியிருப்பு கட்டிடம் ஒன்றும் சோனாவாலுக்கு சொந்தமாக உள்ளது.தருண் கோகாய் மற்றும் அவரது மனைவி டோலிக்கு கடன் என்ற வகையில் ரூ.16 லட்சத்து 20 ஆயிரத்து 397 உள்ளது. அதே போல் சோனாவாலுக்கு ரூ. 2 லட்சத்து 92 ஆயிரம் உள்ளது.