புதுடெல்லி: டெல்லியில் அம்பேத்கரின் நினைவு இல்லத்திற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு விழாவை தொடங்கி வைத்தார். அம்பேத்கரின் வாழ்க்கை மற்றும் அவரது கொள்கைகள் குறித்த அனைத்தையும் ஒரே இடத்தில் தெரிந்து கொள்ளும் வகையில் இந்த நினைவு இல்லத்தை அமைக்க மத்தியஅரசு திட்டமிட்டுள்ளது. சர்வதேச அளவிலான ஒரு மையமாக செயல்படும் வகையில் இதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு விழாவை தொடங்கி வைத்து பேசுகையில், சமூகத்தை மேம்படுத்துவதில் கல்விக்கு முக்கிய பங்கு இருப்பதாக அம்பேத்கர் குறிப்பிட்டுள்ளார். சமூகத்தின் உள் ஆற்றலை மேம்படுத்தக் கூடியதாக கல்விதான் உள்ளது.
நாட்டில் உள்ள அனைத்து தொழிலாளர்களுக்கும் ஒரு சிறந்த வழிகாட்டியாக அம்பேத்கர் உள்ளார். அப்படி இருந்த போதும் அவர் அமைச்சரவையில் இருந்து அப்போது அவர் ராஜினாமா செய்ய நேரிட்டது ஏன்? இது வரலாற்றின் ஒரு பகுதியாக இருந்த போதிலும், மறக்கப்பட்டு விட்டது. பெண்களுக்கு சம உரிமை அளிக்க வேண்டும் என அம்பேத்கர் வலியுறுத்தினார். பெண்களுக்கு சம உரிமைகள் கிடைக்க வழி செய்யாவிட்டால் தன்னால் அமைச்சரவையில் தொடர்ந்து நீடிக்க முடியாது என அம்பேத்கர் தெரிவித்தார்.
அரசியல் சாசனத்தின் வழியாக சமூக சமத்துவத்துக்கும் ஒற்றுமைக்கும் வழி கண்டவர் அம்பேத்கர். அவரது சிந்தனைகள் மூலம் உலகத்திற்கே தலைவராக விளங்கினார். மார்ட்டின் லூதர் கிங்குக்கு இணையான தலைவராக அம்பேத்கர் இங்கு விளங்கினார். பாஜ மீது எதிர்கட்சிகள் கூறி வரும் குற்றச்சாட்டில் எந்த அளவும் உண்மை கிடையாது. ஏற்கனவே வாஜ்பாய் பிரதமராக இருந்த காலத்திலும் சரி, இப்போதும் சரி பாஜ ஆட்சியில் இட ஒதுக்கீட்டில் எந்த மாற்றமும் செய்தது கிடையாது. அம்பேத்கரின் லட்சியம் நிறைவேறும் வகையில் பாஜ அரசு தொடர்ந்து இட ஒதுக்கீட்டை கடைபிடிக்கும். அரசியல் உள் நோக்கத்துடன் பாஜ அரசு மீது எதிர்கட்சிகள் இட ஒதுக்கீடு விவகாரத்தில் எதிர்மறையான விமர்சனங்களை கூறி வருகின்றன என்று மோடி பேசினார்.