கலாபவன் மணி அஞ்சலி கூட்டம் இயக்குனர்-நடிகர்கள் மோதல் வெடித்தது
ஜெமினி, பாபநாசம் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்தவர் கலாபவன் மணி. சில நாட்களுக்கு முன் திடீர் மரணம் அடைந்தார். கேரளா மாநிலம் சாலக்குடியில் அவருக்கு அஞ்சலி கூட்டம் நடந்தது. மம்மூட்டி, மோகன்லால், விக்ரம் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் பங்கேற்றனர். இதில் இயக்குனர் வினயன் கலந்துகொள்ளவில்லை. மணி நடித்த பல்வேறு படங்களை வினயன் இயக்கி இருக்கிறார். அவர் பங்கேற்காதது சர்ச்சையாகியுள்ளது. இதுகுறித்து வினயன் கூறும்போது,’வெளிப்படையாக எனது பதிலை சொல்ல விரும்புகிறேன். சாலக்குடியில் அஞ்சலி கூட்டம் நடக்கும் விவரம் எனக்கு தெரியாது. சில நாட்களுக்கு முன் மணியின் நினைவு நாள் நிகழ்ச்சிக்கு என்னை அழைத்தார்கள் கலந்துகொண்டேன்.
இறுதி சடங்குக்கு பின்னர் நடந்த சடங்குகளிலும் கலந்துகொண்டேன். இதுபோன்ற சடங்குகளில் வேறு எந்த நடிகரும் பங்கேற்கவில்லை. சாலக்குடியில் நடந்த கூட்டம்பற்றி பின்னர்தான் எனக்கு தெரியவந்தது. இந்தகூட்டத்துக்கு என்னை அழைக்கக்கூடாது என்று பிரபல நடிகர் ஒருவர் கண்டிஷன் போட்டுவிட்டதாக தெரிகிறது. வினயனுடன் இந்த மேடையை தன்னால் பகிர்ந்துகொள்ள முடியாது என்று அவர் கூறிவிட்டாராம்’ என்றார். ஏற்கனவே மம்மூட்டி, மோகன்லால் ஆகியோருடன் வினயனுக்கு மோதல் போக்கு நிலவுகிறது. அவர்களில் ஒருவர்தான் வினயனை அழைக்க கூடாது என்று கூறியிருக்க வேண்டும் என இயக்குனர் தரப்பு சொல்கிறது.