விபத்தில் சிக்கி சிகிச்சை பெறுவதால் ஆம்புலன்சில் வந்து 10ம் வகுப்பு தேர்வு எழுதினார் மாணவர்
மணப்பாறை: விபத்தில் சிக்கியதால் சிகிச்சை பெற்று வரும் 10ம் வகுப்பு மாணவர் ஆம்புலன்சில் வந்து தேர்வு எழுதினார்.திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த கொட்டப்பட்டியைச் சேர்ந்த வெங்கடாச்சலம் மகன் கலியபெருமாள்(15). உடையாபட்டியில் உள்ள தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்தார். சில நாட்களுக்கு முன் சாலை விபத்தில் சிக்கிய கலியபெருமாளுக்கு காலில் முறிவு ஏற்பட்டது. திருச்சி அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தற்போது அவர் மணப்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
நேற்று 10ம் வகுப்பு தேர்வுகள் தொடங்கியதால், கலியபெருமாளும் தேர்வு எழுத விரும்பினார். டாக்டர்கள் அனுமதியோடு மணப்பாறை அரசு மருத்துவமனையிலிருந்து ஆம்புலன்ஸ் மூலம் நேற்று தேர்வு மையத்திற்கு கலியபெருமாள் வந்தார். இதற்காக அவருக்கு தனியாக அறை ஒதுக்கப்பட்டு இருந்தது. ஸ்டெச்சரில் படுத்த படி கலியபெருமாள் பதில்களை சொல்ல, அவருக்கு பதிலாக ஆசிரியர் ஒருவர் பதில்களை எழுதினார். மற்ற தேர்வுகளுக்கும் இதே போல் வந்து தேர்வு எழுத உள்ளதாக கலியபெருமாள் கூறினார்.