கந்து வட்டிக்காரர்களுக்கு குண்டாஸ்: ஐகோர்ட் யோசனையை ஏற்க அரசுக்கு ராமதாஸ் கோரிக்கை
சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை:கந்துவட்டி கொடுமைக்கு முடிவு கட்டுவதில் உயர்நீதிமன்றத்துக்கு இருக்கும் அக்கறை தமிழக அரசுக்கு இருக்கிறதா என்றால், இல்லை என்பதுதான் பதிலாக இருக்கும். அதனால்தான் தமிழகத்தில் கந்து வட்டி தடைச் சட்டம் பல ஆண்டுகளாக இருக்கும்போதிலும், அதைப் பயன்படுத்தி கந்துவட்டிக்காரர்களை ஒடுக்க தமிழக அரசு முழு மனதுடன் எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. தமிழ்நாட்டில் கந்துவட்டிக்கொடுமை தாங்க முடியாமல் கடந்த 5 ஆண்டுகளில் 604 பேர் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள் என்று காவல்துறை புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
எனவே, உயர்நீதிமன்ற அறிவுரையை ஏற்று கந்து வட்டிக்காரர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கும் வகையில் குண்டர் சட்டம் திருத்தப்பட வேண்டும். அதுமட்டுமின்றி, வாழ்வாதாரம் இல்லாத ஏழைகள் தொழில் செய்வதற்கு மூலதனம் இல்லாததால் தான் கந்துவட்டி பொறியில் சிக்கிக் கொள்கின்றனர். இவர்களுக்கு தொழில் தொடங்க வசதியாக வட்டியில்லாமலோ அல்லது குறைந்த வட்டியிலோ வங்கிக்கடன் வழங்கி அதன் மூலம் கந்துவட்டிக் கொடுமைக்கு முடிவு கட்டவும், ஏழை மக்களை பாதுகாக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.