சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த வரும் 10ம் தேதியில் இருந்து 24ம் தேதி வரை இரு வாரங்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இதையொட்டி வணிக நிறுவனங்கள், டாஸ்மாக் கடைகள் மூடப்படுகிறது. காய்கறி, மளிகை, மீன் மற்றும் இறைச்சி விற்பனைக் கடைகள் பகல் 12 மணி வரை மட்டும் திறந்திருக்கும். போக்குவரத்தும் தடை செய்யப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை: கொரோனா வைரஸ் நோய்த்தொற்றைத் தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 25ம் தேதி முதல் தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், ஊரடங்கு உத்தரவு பல்வேறு தளர்வுகளுடன் அமலில் இருந்து வருகிறது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் மார்ச் 2021 முதல் தொடர்ந்து கோவிட் தொற்று உறுதியாகும் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வந்து கொண்டிருக்கிறது.
அண்மைக் காலங்களில் இந்திய அளவில் நாளொன்றுக்கு நான்கு லட்சத்தைத் தாண்டியும் பதிவாகி உள்ளது. குறிப்பாக, மஹாராஷ்டிரா, கர்நாடகா, கேரளா, உத்தரப்பிரதேசம், டெல்லி மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்களில் நோய்த்தொற்று அதிகரிக்கும் நிலை காணப்படுகிறது. தமிழ்நாட்டிலும் படிப்படியாக இந்த நோய்த்தொற்று, பிப்ரவரி மாதக் கடைசியில் நாளொன்றுக்கு 450 என்ற நிலை மாறி தற்பொழுது நாளொன்றுக்கு 26,000க்கும் மேல் பதிவாகி வருகிறது. 23க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் நோய்த்தொற்று உறுதியாகும் எண்ணிக்கை நாளொன்றுக்கு 10 விழுக்காட்டிற்கும் மேல் உள்ளது. தமிழ்நாட்டில் நேற்று 7ம் தேதி கணக்கீடுபடி, தற்போது நோய்த்தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கை 1.35 லட்சமாக உள்ளது. தற்போதுள்ள நோய் பரவல் நிலை, வெளிநாடுகளில் உருமாறிய கொரோனா வைரஸின் தாக்கம், அண்டை மற்றும் இதர வெளிமாநிலங்களில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பாதிப்பிற்குள்ளானவர்களின் எண்ணிக்கை, மருத்துவ நிபுணர்கள் மற்றும் பொது சுகாதார வல்லுநர்களது பரிந்துரையின் அடிப்படையிலும், மத்திய அரசின் உள் துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதல்களின்படியும், கொரோனா நோய்த் தொற்றை தடுப்பதற்காக தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டம், 2005-ன் கீழ், தற்போது 01.05.2025 முதல் தமிழ்நாடு முழுவதும் இரவு நேர ஊரடங்கு, மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் இரவு 10.00 மணி முதல் காலை 4.00 மணி முடிய பல்வேறு கட்டுப்பாடுகளுடன் அமல்படுத்தப்பட்டு வருகிறது.
ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு, ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட சில செயல்பாடுகளுக்கான தடை மற்றும் கட்டுப்பாடுகளுடன் அமல்படுத்தப்படுகிறது. நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்த, 06.05.2025 காலை 4.00 மணி முதல் 20.05.2025 காலை 4.00 மணி முடிய பல்வேறு புதிய கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டு நடைமுறையில் இருந்து வருகிறது. நான் நேற்று (7ம் தேதி) அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி காட்சி மூலம் நடத்திய ஆய்வுக் கூட்டத்தின் போது தெரிவிக்கப்பட்ட கருத்துகளின் அடிப்படையிலும், மருத்துவ வல்லுநர்களுடன் கலந்தாலோசித்தும், நோய்ப் பரவலைத் தடுக்க மத்திய அரசின் உள் துறை அமைச்சகம், மருத்துவம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் ஆகியவை பரிந்துரைத்துள்ள ஒரு சில செயல்பாடுகளுக்கான கட்டுப்பாடுகளை கருத்தில் கொண்டும், தமிழ்நாட்டில் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்த, தவிர்க்க முடியாத காரணங்களின் அடிப்படையில், 10ம் தேதி காலை 4.00 மணி முதல் 24ம் தேதி காலை 4.00 மணி வரை இருவாரங்களுக்கு மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படும்.