சென்னை: நடிகர் சங்க கட்டிடம் ரூ. 24 கோடி செலவில் கட்டப்படும் என்று நடிகர் சங்க நிர்வாகிகள் கூறினர்.நடிகர் சங்க தலைவர் நாசர், பொதுச் செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, துணை தலைவர் பொன்வண்ணன் நேற்று சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அவர்கள் கூறியது:நடிகர் சங்கம் கட்டிடம் கட்டுவதற்காக சங்கம் சார்பில் நடத்தப்பட்ட நட்சத்திர கிரிக்கெட் மிகப் பெரிய வெற்றி பெற்றது. சன் டி.வி இந்நிகழ்ச்சியை ஒளிப்பரப்பியது. இந்நிகழ்ச்சி வெற்றிக்காக பெரிய நடிகர்கள் முதல் அனைத்து கலைஞர்களும் கஷ்டப்பட்டு உழைத்தார்கள். சரோஜாதேவி, வாணிஸ்ரீ, விஜயகுமாரி போன்ற மூத்த கலைஞர்களும் ஒத்துழைப்பு தந்தனர். அவர்களுக்கு நன்றி. இதன் மூலம் சங்கத்துக்கு ரூ. 8 கோடி வருமானம் கிடைத்திருக்கிறது.
ரூ. 2 கோடி கடன் அடைக்கப்பட்டிருக்கிறது. கட்டிடம் கட்டுவதற்கான பொறியாளர்களுடனான ஆலோசனை உள்ளிட்ட பணிகள் நடந்து வருகிறது. ரூ. 24 கோடி செலவில் கட்டிடம் உருவாக உள்ளது. சங்கத்துக்கு மொத்தம் ரூ. 28 கோடி நிதி திரட்ட திட்டமிடப்பட்டிருக்கிறது. இந்த தொகை மூலம் நாடக கலைஞர்கள் முதல் நலிந்த கலைஞர்கள் மற்றும் மூத்த கலைஞர்களுக்கு கல்வி, பென்சன், மருத்துவ உதவி போன்றவை வழங்கப்படும். அடுத்தடுத்து நிகழ்ச்சிகள் நடத்தியும், நன்கொடை மூலமும் சங்கத்திற்கான நிதி திரட்டப்படும். அஜீத், விஜய், சிம்பு என எல்லோர் மீதும் நாங்கள் அன்பு வைத்திருக்கிறோம். யாரையும் எதிர்ப்பது எங்கள் நோக்கமல்ல. எல்லோரையும் ஒற்றுமையுடன் அரவணைத்து சங்கத்தை நடத்துவதே நோக்கம். இவ்வாறு அவர்கள் கூறினர்.