சென்னை: அறுபத்து மூவர் திருவிழாவில் 20க்கும் மேற்பட்ட செயின் பறிப்பில் ஈடுபட்ட கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. மேலும், சிசிடிவி கேமரா பதிவுகளையும் ஆய்வு செய்யும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் அறுபத்து மூவர் திருவிழாவை காண ஆயிரக்கணக்கான மக்கள் வந்திருந்தனர். இதனால், மயிலாப்பூர் பகுதிகள் முழுவதும் மக்கள் தலைகளாகவே காட்சியளித்தது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்ட கொள்ளையர்கள் கூட்ட நெரிசலில் அறுபத்து மூவர் விழா தொடங்குவதற்கு முன்பாகவே குழந்தைகள் மற்றும் வயதான பெண்கள் என 12 பேரிடம் இருந்து 45 சவரன் நகைகளை கொள்ளையடித்து சென்றனர். இதுகுறித்து முறையாக புகார் அளித்தும் பாதிக்கப்பட்டவர்களிடம் புகாரை வாங்காமல் தொலைபேசி எண், வீட்டு முகவரி வாங்கி கொண்டு போலீசார் அனுப்பி வைத்தனர்.
அதன்பிறகு அறுபத்து மூவர் விழா தொடங்கியது. அந்த நேரத்தில் பக்தர்கள் ஒரே இடத்தில் கூடினர். இந்த கூட்ட நெரிசலை பயன்படுத்தி கொண்ட கொள்ளை கும்பல் மேலும் 8 பேரிடம் 25 சவரன் செயின்களை பறித்தனர்.நேற்று முன்தினம் தேர்திருவிழாவையொட்டி பாதுகாப்பு குறைபாடு காரணமாக 5 பெண்களிடம் செயின்பறிக்கப்பட்டது. அதன்பிறகு போலீசார் பாதுகாப்பு பணியை தீவிரப்படுத்தியிருக்க வேண்டும். மாறாக போலீசார் அலட்சியம் காட்டியதன் விளைவாக நேற்று மட்டும் 20 பேரிடம் செயின் பறிப்பு சம்பவம் நடந்துள்ளது என்று பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இந்நிலையில், திருவிழாவில் செயின் பறிப்பு சம்வங்களில் ஈடுபட்ட நபர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த தனிப்படை போலீசார் முதற்கட்டமாக திருவிழாவிற்காக அமைக்கப்பட்ட தற்காலிக சிசிடிவி கேமரா, கோயில் மற்றும் அதை சுற்றிலும் அமைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவாகி உள்ள காட்சிகளை முழுமையாக ஆய்வு செய்து வருகின்றனர்.கூட்ட நெரிசலில் சந்தேகப்படும் வகையில் சுற்றி திரிந்தவர்களை கணக்கெடுக்கும் பணி நடந்து வருகிறது. பழைய குற்றவாளிகளா அல்லது வெளிமாவட்ட மற்றும் அண்டை மாநில கொள்ளையர்களா என தனிப்படை போலீசார் தீவிர ஆய்வு செய்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.