காங். தலைவர் திக் விஜய் சிங்குக்கு மகாராஷ்டிர பாஜ முதல்வர் நோட்டீஸ் அவதூறு கருத்து வெளியிட்டதாக புகார்
மும்பை: மகாராஷ்டிரா முதல்வர் பட்நவிஸ் தனது மனைவி பணிபுரியும் வங்கிக்கு சாதகமாக நடந்து கொள்கிறார் என குற்றம் சாட்டிய காங்கிரஸ் தலைவர் திக் விஜய் சிங்குக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். மகாராஷ்டிராவில் தேவேந்திர பட்நவிஸ் தலைமையிலான பாஜ-சிவசேனா கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. பட்நவிஸ் பல்வேறு துறைகளையும் தன் வசம் வைத்துள்ளார். இவரது தலைமையின் கீழ் உள்ள குடிசை மாற்று வாரியம் அண்மையில் வெளியிட்ட அறிவிப்பில், ஒப்பந்ததாரர்கள் மாநில அரசின் பண பலனை பெற வேண்டுமானால், மும்பையில் உள்ள ஆக்சிஸ் வங்கி கிளைகளில் கணக்கு தொடங்க வேண்டும் என அறிவித்திருந்தது.
இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மத்திய பிரதேச முன்னாள் முதல்வருமான திக் விஜய் சிங் தனது டுவிட்டரில், அந்த வங்கியில் பட்நவிஸ் மனைவி அதிகாரியாக பணியாற்றி வருகிறார். எனவே வங்கிக்கு சாதகமாக பட்நவிஸ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார் என்று குற்றம் சாட்டினார்.இந்த விவகாரத்தை முதல்வர் அலுவலகம் மறுத்திருந்தது. இருந்த போதிலும் இது தொடர்பாக திக் விஜய் சிங் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என பட்நவிசின் வக்கீல் கணேஷ் சோவானி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. நோட்டீஸ் கிடைத்த இரண்டு வாரத்திற்குள் அவர் மன்னிப்பு கேட்க தவறினால் அவர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். தற்போது இந்த விவகாரம் மகாராஷ்டிரா அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.