தேமுதிக, பாமகவுடன் ஏற்கனவே பேசிவிட்டோம் முடிவை அவர்கள் தான் அறிவிக்க வேண்டும் : பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி
சென்னை: மத்தியில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்த பாஜ கட்சி தமிழகத்தில் வலுவான கூட்டணியை ஏற்படுத்த முடியாமல் திணறி வருகிறது. பாஜ கூட்டணியில் தேமுதிக, பாமக உள்ளிட்ட கட்சிகளை இழுத்து சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளலாம் என கணக்கு போட்டது. ஆனால் அதற்கான வாய்ப்புகள் இன்னும் அமையவில்லை. இந்நிலையில், பெரிய கட்சிகள் எல்லாம் கைவிட்டுவிட்டதால் சிறிய கட்சிகளுடன் பாஜ தலைமை பேச்சுவார்த்தை நடத்த தொடங்கியுள்ளது.இன்று காலை மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தலைமையில் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டது. அப்போது, பாஜ கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ள அனைந்திந்திய முஸ்லிம் முன்னேற்ற கழக தலைவர் சதக் அப்துல்லா, இந்திய முன்னேற்ற கல்வி கழக தலைவர் தேவநாதன், தென்னிந்திய பார்வர்டு பிளாக் நிறுவன தலைவர் திருமகன் ஆகியோர் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.பின்னர் பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:
இன்று 12 கட்சிகளுடன் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளோம். வலுவான கூட்டணியை அமைத்து பாஜ தேர்தலை சந்திக்கும். பாஜ தேர்தல் அறிக்கை தயாராகிவிட்டது. இம்மாத இறுதியில் வெளியிடப்படும். இவ்வாறு அவர் கூறினார். தேமுதிக, பாமகவுடனான கூட்டணி பேச்சுவார்த்தை எந்த அளவில் உள்ளது? என்ற நிருபர்களின் கேள்விக்கு அவர் பதிலளிக்கையில்,‘‘ தேமுதிக, பாமக ஆகிய கட்சிகளுடன் கூட்டணி குறித்து ஏற்கனவே அவர்களுடன் பேசிவிட்டோம். முடிவை அவர்கள்தான் அறிவிக்க வேண்டும். அதை பொறுத்து பாஜகவின் முடிவு இருக்கும்’’ என்றார். இதனிடையே, நடிகர் விஜயகுமார் இன்று சென்னையில் பொன்.ராதாகிருஷ்ணனை சந்தித்து பாஜவுக்கு ஆதரவு தெரிவித்தார். இதையடுத்து அவர் பாஜவில் சேருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.