சென்னை: தேர்தல் நேரத்தில் டாஸ்மாக் கடைகளில் நடைபெறும் முறைகேடுகளை தவிர்க்கவும், விற்பனையை அதிகரிக்கச் செய்யவும் நிர்வாக இயக்குநர் தலைமையில் மாவட்ட மேலாளர்கள், மண்டல மேலாளர்கள் ஆலோசனை கூட்டம் சென்னையில் இன்று காலை நடந்தது. தேர்தல் நடத்தை விதிகளை கடைப்பிடிக்கவும், டாஸ்மாக் ஊழியர்களுக்கு கடைபிடிக்க வேண்டி அறிவிக்கப்பட்ட 15 கட்டளைகள் முறையாக கடைப்பிடிக்கப்படுகிறதா, தேர்தலை முன்னிட்டு விற்பனை அதிகரிப்பது என்பது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்க டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் மகேஷ்வரன் தலைமையில் மண்டல மேலாளர்கள், மாவட்ட மேலாளர்கள் கூட்டம் சென்னையில் இன்று காலை நடைபெற்றது.
டாஸ்மாக் நிர்வாகத்துக்கு அறிவித்த 15 கட்டளைகளின் விவரம்: டாஸ்மாக் கடைகளில் 21 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே மதுபாட்டில்கள் விற்கப்படும் என்ற விளம்பர பலகையை, அனைவரது பார்வையிலும் படும்படி டாஸ்மாக் கடையின் முன்னால் வைக்க வேண்டும், மின் கசிவினால் அவ்வப்போது டாஸ்மாக் கடைகளில் தீ விபத்துகள் ஏற்படுகிறது. தீவிபத்தை தடுக்கும் வகையில், மின் கசிவு ஏற்பட்டவுடன், மின்தடை செய்யும் கருவிகள் பொருத்த வேண்டும் (டிரிப்பர்கள்), பெட்டிபெட்டியாக மதுபாட்டில்களை தனிநபர்களுக்கு விற்பனை செய்யக்கூடாது.
மதுபாட்டில்கள் வாங்கும் நுகர்வோர் அனைவருக்கும், மதுபாட்டிலுக்கு உரிய விலையுடன் கூடிய ரசீது வழங்கவேண்டும். ரசீது வழங்காமல் மதுபாட்டில்கள் விற்பனை செய்யக்கூடாது, மதுபான கடைகள் அருகே உரிமம் பெற்ற பார்கள் காலை 10 மணி முதல் இரவு 10 மணிவரை தான் திறந்து இருக்க வேண்டும். குறிப்பிட்ட இந்த நேரத்துக்கு முன்போ, அதற்கு பிறகோ கடைகள் திறந்திருப்பின். சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும், கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்களிடம் பிரச்னைகள் ஏற்படாத வகையில் மேற்பார்வையாளர்களும், விற்பனையாளர்களும் நடந்து கொள்ள வேண்டும். மரியாதை குறைவாக பொதுமக்களை பேசக்கூடாது. மது கடையில் உள்ளே இருக்கும் போது ஊழியர்கள், தங்களின் அடையாள அட்டை சட்டைக்கு வெளியே தெரியும்படி அணியவேண்டும் ஆகியவை குறிப்பிடத்தக்கதாகும்.
அறிவிக்கப்பட்ட 15 கட்டளைகளையும் ஊழியர்கள் கடைப்பிடிக்கின்றனரா என்பதை கண்காணித்து, டாஸ்மாக் நிர்வாக தலைமை அலுவலகத்துக்கு நாள்தோறும், அறிக்கை அனுப்ப மாவட்டத்துக்கு 5 பேர் அடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளது. இக்குழுவில், ஓய்வு பெற்ற ராணுவ ஊழியர் ஒருவர், மூன்று மேற்பார்வையாளர்கள், ஒரு உதவி மாவட்ட அதிகாரி அடங்குவர். தேர்தல் நடத்தை விதிகளும் முறையாக கடைப்பிடிக்கவேண்டும் என்பது கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
நிர்வாக இயக்குனர் தலைமையில் இன்று காலை நடந்த கூட்டத்தில், ஐவர் குழுவின் பணிகள், அவர்கள் அனுப்பி வைக்கும் அறிக்கைகள் மீதான நடவடிக்கைகள், தேர்தலை முன்னிட்டு, மதுபான விற்பனையை அதிகரிப்பது, உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. தேர்தல் நேரத்தில் மது விற்பனையை அதிகரிக்க அதிகாரிகள் கூட்டம் நடத்தி பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.