செல்போனில் அழைத்து தொல்லை சாய் பல்லவி பகீர் புகார்
மணிரத்னம் இயக்கும் புதிய படத்தில் கார்த்தி ஜோடியாக நடிக்க உள்ளார் சாய் பல்லவி. இவர் மலையாளத்தில் வெளியாகி ஹிட்டான ‘பிரேமம்’ படத்தில் மலர் டீச்சராக நடித்து இளசுகளின் மனதை கொள்ளையடித்தவர். தமிழுக்கு வரும் அதேவேளையில் படிப்புக்காக வெளிநாடு செல்லவும் முடிவு செய்திருக்கிறார். இதுபற்றி சாய் பல்லவி கூறியது:மலர் கதாபாத்திரம் என்னை ரசிகர்கள் மனதில் பதிய வைத்திருப்பது நிஜம். அடுத்து ‘களி’ படத்தில் அஞ்சலி கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். இதன் ஷூட்டிங்கின்போது என்னை யாரும் மலர் என அழைக்கக்கூடாது என தடை விதிக்கப்பட்டது.
ஜார்ஜியாவில் 6வது ஆண்டு மருத்துவ படிப்பு படித்து வருகிறேன். இது தேர்வு நேரம். படப்பிடிப்புக்கு மத்தியில் நான் ஜார்ஜியா பறந்துவிடுவேன். இம்மாத இறுதியில்தான் இந்தியா திரும்புவேன். நடிப்பு, படிப்பு இரண்டுமே எனக்கு முக்கியம். படங்களில் நடிக்கும்போது படிப்புக்கு ஓய்வு கொடுத்துவிடுகிறேன். நல்ல படங்கள் வந்தால் மறுபடியும் நடிப்பேன். மலர் கதாபாத்திரம் என்னை தூங்கவிடாமல் செய்திருக்கிறது. ஜார்ஜியாவில் படிப்பில் கவனம் செலுத்தும் நேரத்திலும் போன் அழைப்பு வந்த வண்ணம் உள்ளது. தொடக்க விழா, விருது விழா, பொது நிகழ்ச்சியில் பங்கேற்க அழைக்கிறார்கள். இதனால் பலமுறை நான் அவசரமாக ஊர்வந்து திரும்ப வேண்டி இருக்கிறது.