நேரு பல்கலை கழகத்தில் தேச விரோத கோஷம் கன்னையா குமாருக்கு நேரடி தொடர்பு இல்லை டெல்லி அரசு விளக்கம்
புதுடெல்லி: நேரு பல்கலை கழகத்தில் தேச விரோத கோஷம் எழுப்பிய விவகாரத்தில் கன்னையா குமாருக்கு நேரடி தொடர்பு எதுவும் இல்லை என நீதிமன்றத்தில் டெல்லி அரசு தெரிவித்துள்ளது.டெல்லி நேரு பல்கலை கழகத்தில் கடந்த பிப்ரவரி 9ம் தேதி நடைபெற்ற அப்சல் குரு நினைவு தின நிகழ்ச்சியின் போது தேச விரோத கோஷங்கள் எழுப்பப்பட்டதாக பரபரப்பு எழுந்தது. இதை தொடர்ந்து மாணவர் சங்க தலைவர் கன்னையா குமார், உமர் காலித் உள்ளிட்ட மாணவர்கள் தேச துரோக வழக்கில் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் கன்னையா குமாருக்கு 6 மாத இடைக்கால ஜாமீன் வழங்கி விடுதலை செய்யப்பட்டுள்ளார்.இந்த சூழலில் கன்னையா குமார் உள்ளிட்ட மாணவர்கள் தேச விரோத கோஷங்கள் எழுப்பிய விவகாரம் தொடர்பாக டெல்லி அரசு சார்பில் விசாரணை நடத்தப்பட்டது.
டெல்லி அரசின் அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளதாக மாவட்ட கலெக்டர் சஞ்சய் குமார் தெரிவித்தார்.அந்த அறிக்கையில், பல்கலையில் தேச விரோத கோஷங்கள் எழுப்பியது தொடர்பாக கன்னையா குமாருக்கு நேரடி தொடர்பு எதுவும் இல்லை. மற்ற மாணவர்களான உமர் காலித் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் இடம் பெற்றுள்ள காட்சிகள் வீடியோவில் பதிவாகியுள்ளன. இவர்கள் நிகழ்ச்சியை ஒருங்கிணைக்கவும் செய்துள்ளனர். இருந்த போதிலும் கோஷம் எழுப்பியது தொடர்பாக மேலும் விசாரணை நடத்தப்பட வேண்டியுள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.கோஷம் எழுப்பியது உண்மைதான் என்பது உறுதியாகியுள்ளது. அவ்வாறு கோஷம் எழுப்பிய மாணவர்கள் சிலரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவை குறித்து மேலும் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.