தேர்தல் படுத்தும் பாடு : பாதாள சாக்கடை விரிவாக்க திட்டத்துக்கு அதிகாலையில் பூஜை போட்ட அமைச்சர்
சிதம்பரம்,: சிதம்பரத்தில் பாதாள சாக்கடை விரிவாக்க திட்டத்திற்கு அவசர, அவசரமாக அதிகாலையில் அமைச்சர் சம்பத் பூமி பூஜை நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகரில் மக்கள் தொகை வளர்ச்சிக்கு ஏற்ப பாதாள சாக்கடை திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும் என்ற நீண்டநாள் கோரிக்கையை ஏற்று புதிய பாதாள சாக்கடை திட்டத்துக்கு தமிழக அரசு ரூ.53 கோடி நிதி ஒதுக்கியது.
அந்த தொகைக்கு பணிகளை நிறைவேற்ற முடியாது என்பதால் யாரும் டெண்டர் எடுக்க முன் வரவில்லை. இதனால் அறிவிப்பு வெளியிட்டு பல ஆண்டுகளாகியும் பணிகள் துவங்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டிருந்தது. இந்நிலையில் புதிய பாதாள சாக்கடை திட்டத்தின் விரிவாக்கத்திற்கு அரசு ரூ.75 கோடி நிதி ஒதுக்கிஅறிவித்தது. தேர்தல் தேதி ஓரிரு நாட்களில் அறிவிக்கப்பட உள்ளதால் அவசரக் கோலத்தில் அதிகாலையில் இந்த திட்டத்திற்கான பூமி பூஜை நேற்று நடத்தப்பட்டது.
சிதம்பரம் லால்புரம் அருகே உள்ள நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் பூமி பூஜை நடந்தது. அதிகாலையில் அமைச்சர் சம்பத் பூமி பூஜையை தொடங்கி வைத்தார். கலெக்டர் சுரேஷ்குமார், குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் சுப்பிரமணியன், நகர் மன்ற தலைவர் நிர்மலாசுந்தர், நகராட்சி ஆணையர்(பொறுப்பு) ஜெகதீசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மக்கள் நல திட்டம் மக்களுக்கு தெரியாமலேயே அதிகாலையில் தொடங்குவதா என கேட்கும் பொதுஜனம் எல்லாம் தேர்தல் படுத்தும் பாடுதான் என்று கலாய்க்கிறது.