இந்திய கடலோர காவல்படை தலைமை இயக்குனராக ராஜேந்திர சிங் கடந்த வாரம் பொறுப்பேற்றுக் கொண்டார். இத்துறைக்கு கடற்படை சாராத அதிகாரி ஒருவர் பொறுப்புக்கு வருவது இதுவே முதல்முறை. கடந்த 1980-ம் ஆண்டில் இந்திய கடலோர காவல்படையில் சேர்ந்த ராஜேந்திர சிங், பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்தார். மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு தீவிரவாதத் தாக்குதல் நடந்தபோது, துணை அட்மிரலின் பொறுப்புகள் இவரிடம் ஒப்படைக்கப்பட்டன. பின்னர், இந்திய கடலோர காவல்படை கூடுதல் இயக்குனர் ஜெனரலாக பதவி வகித்தார். இந்நிலையில், மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுடன் கடந்த மாதம் 24-ம் தேதி ராஜேந்திர சிங் கடலோர காவல்படை இயக்குநர் ஜெனரலாக நியமிக்கப்பட்டார். இந்திய கடலோர பாதுகாப்பு சார்ந்த நடவடிக்கைகள், நிர்வாகம், கொள்கை முடிவுகள் ஆகியவற்றில் ராஜேந்திர சிங் மிகுந்த அனுபவம் மிக்கவர் என்பதால் இப்பொறுப்புக்கு நியமிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.