பலாத்காரத்தை எதிர்த்த ஆசிரியை சுட்டு கொலை : அரியானாவில் பரிதாபம்
சண்டிகர்: அரியானாவில் திருமண வீ்ட்டில் பலாத்காரம் செய்ய முயன்றவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்த ஆசிரியை ஒருவர் சுட்டு கொல்லப்பட்டார். அரியானாவில் உள்ள சண்டிகரில் இருந்து சுமார் 200 கிமீ தொலைவில் உள்ள பட்டாள நகரில் நேற்று முன்தினம் இரவு திருமண விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அங்குள்ள அரசு பள்ளி ஒன்றில் கம்ப்யூட்டர் ஆசிரியராக பணியாற்றி வந்த பெண் ஒருவர் தன்னுடைய கணவருடன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் ஐஸ்கிரீம் வழங்கப்பட்டது.
ஐஸ்கிரீம் வாங்கிக் கொண்டு வந்த அந்த ஆசிரியரிடம் போதையில் இருந்த இரண்டு வாலிபர்கள் ஆபாச கமெண்ட் அடித்துள்ளனர். மேலும் அவரிடம் தவறாக நடக்க முயன்றுள்ளனர். இதற்கு அவர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த ஒரு வாலிபர் தன்னிடம் இருந்த துப்பாக்கியால் அவரை சுட்டார். இதில் சம்பவ இடத்திலேயே ஆசிரியை உயிரிழந்தார்.இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் சுட்டு கொன்ற வாலிபர்கள் பர்மீந்தர் சிங், நவ்கிரன் சிங் என்பது அடையாளம் தெரிந்தது. நேற்று அவர்களை போலீசார் கைது செய்தனர்.