குவாலியர் உயிரியல் பூங்காவில் 2 நாளில் 8 பறவைகள் சாவு
10/21/2016 2:48:20 PM
புதுடெல்லி, -டெல்லியில் தேசிய உயிரியல் பூங்கா செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமான வன விலங்குகள், பறவைகள் உள்ளிட்டவை பாதுகாக்கப்பட்டு வருகின்றன. நாள்தோறும் இங்கு ஏராளமான பார்வையாளர்கள் வந்து செல்கின்றனர். கடந்த வாரம், இந்த பூங்காவில் வெளிநாட்டு பறவைகளான பெலிக்கான், வெள்ளை வாத்து உள்ளிட்ட 60 பறவைகளுக்கு பறவை காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது. இதில் 9 பறவைகள் உயிரிழந்தன. இதையடுத்து பறவை காய்ச்சல் மற்ற பறவைகள் மற்றும் விலங்குகளுக்கும் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உயிரியல் பூங்கா காலவரையின்றி மூடப்பட்டுள்ளது.
இந்நிலையில், மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் உள்ள தேசிய உயிரியல் பூங்காவிலும் பறவை காய்ச்சல் பரவியுள்ளது. கடந்த 2 நாட்களில் பறவை காய்ச்சலுக்கு 8 பறவைகள் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து, நாடு முழுவதும் உள்ள வன விலங்குகள் பாதுகாப்பு பூங்காக்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.
பறவை காய்ச்சல் காரணமாக இந்த ஆண்டின் தொடக்கத்தில் டெல்லி உயிரியல் பூங்காவில் 46 மான்கள் இறந்தன என்பது குறிப்பிடத்தக்கது.