அரவக்குறிச்சி உள்ளிட்ட 3 தொகுதி தேர்தல் - திமுக நேர்காணல் துவக்கம் இன்று மாலை பட்டியல்
10/21/2016 2:42:54 PM
சென்னை, - அரவக்குறிச்சி உள்பட மூன்று சட்டசபை தொகுதி தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விரும்புவோரிடம் நேர்காணல் இன்று காலை அண்ணா அறிவாலயத்தில் நடந்தது.தமிழகத்தில் கடந்த மே மாதம் சட்டசபை பொதுத் தேர்தல் நடைபெற்றது. அப்போது, அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தொகுதிகளில் வாக்காளர்களுக்கு ஆளும் கட்சியினர் பணம் பட்டுவாடா செய்தனர். மேலும், ஒவ்வொரு தொகுதியிலும் கோடிக்கணக்கில் பணம் புரண்டது. சில இடங்களில் கோடிக்கணக்கான ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டன. இந்நிலையில், அதிக பணபட்டுவாடா நடந்த தொகுதிகளான அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தொகுதிகளில் மட்டும் தேர்தலை ஆணையம் ரத்து செய்தது. அங்கு விரைவில் தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது
.
இந்நிலையில் அதிமுக மீண்டும் வெற்றிபெற்று ஆட்சி அமைத்தது. திருப்பரங்குன்றம் தொகுதியில் அதிமுக சார்பில் வெற்றிபெற்ற சீனிவேலு எம்எல்ஏ பதவியேற்கும் முன்பே மரணம் அடைந்தார். இதையடுத்து அந்த தொகுதியும் காலியானது.
இந்நிலையில், தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளுக்கு நவம்பர் 19ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் வரும் 26ம் தேதி தொடங்குகிறது. இதையொட்டி திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர். அதிமுக வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக சார்பில் தேர்தலில் போட்டியிடுபவர்களிடம் விருப்ப மனுக்கள் கடந்த 2 நாட்களாக பெறப்பட்டன. மூன்று தொகுதிகளுக்கும் 20க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இன்று காலை அண்ணா அறிவாலயத்தில் விருப்ப மனு அளித்தவர்களிடம் நேர்காணல் நடத்தப்பட்டது. திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் கலந்து கொண்டு நேர்காணல் நடத்தினார். கட்சிப் பொருளாளர் மு.க.ஸ்டாலின், முதன்மைச் செயலாளர் துரைமுருகன், ஆர்.எஸ்.பாரதி எம்பி, சுப்புலட்சுமி ஜெகதீசன் உள்ளிட்டோர் அவருடன் நேர்காணலில் கலந்து கொண்டனர். போட்டியிட விரும்புவோரிடம் தொகுதி நிலவரங்கள் குறித்து அவர்கள் கேட்டறிந்தனர்.
திருப்பரங்குன்றம் தொகுதிக்கு முத்தையா, ஈஸ்வரன், டாக்டர் சரவணன், மணிமாறன் ஆகியோரும், தஞ்சாவூர் தொகுதிக்கு அஞ்சுகம் பூபதி, நீலமேகம், சன் ராமநாதன், செல்வம் ஆகியோரும், அரவக்குறிச்சி தொகுதிக்கு கே.சி.பழனிச்சாமி, நன்னியூர் ராஜேந்திரன், கே.கருணாநிதி, லட்சும் ஆகியோரும் கலந்து கொண்டனர். இவர்கள் அனைவரிடமும் நேர்காணல் நடத்தப்பட்டு இன்று மாலை இறுதி பட்டியல் வெளியாகலாம் என்று தெரிகிறது.