வெட்டிப்பசங்க!
9/16/2016 2:46:38 PM
சென்னை சுவாதியில் ஆரம்பித்தது தற்போது கோவை தன்யா வரை நீண்டிருக்கிறது. எதிர்காலக் கனவுகளுடன் காத்திருந்த இளைஞிகள் இவர்கள். தற்போது உயிருடன் இல்லை என்பது சோகம். காரணம், ஒருதலைக் காதல்.கொலைகளுக்கு முன்பகையோ, திடீர் உணர்ச்சி வேகமோ காரணமாக இருக்கலாம். ஒருதலைக்காதல் வெறியர்களுக்கு இவை எதுவுமே இல்லை. கொப்பளிக்கும் காமமும், தான் விரும்பியதெல்லாம் தனக்கே என்ற அதிகார ஆளுமையும்தான், ஒரு தலைக்காதலர்களால் 6 இளைஞிகளும் கொல்லப்பட்டதற்குக் காரணம்.
கோவை மாவட்டம் அன்னூரில் வசித்துவந்த தன்யா(23), கேரளாவைச் சேர்ந்தவர். இவரது வீட்டு அருகே வசித்தவர் ஜாகீர். பக்கத்து வீடு என்பதால், தன்யாவுக்கு ஜாகீருடன் பழக்கம். தன்யாவின் பெற்றோர், ஜாகீரைச் சொந்த மகனாகப் பாவித்தனர். தன்யாவுக்கு வேறு ஒருவருடன் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இதைப் பொறுக்க முடியாத ஜாகீர், ஓணம் திருநாளில், தன்யாவைத் தீர்த்துக்கட்டியிருக்கிறார்.
அன்பின் உயரிய வெளிப்பாடே காதல். உயிர்களை நேசிக்க அன்பு போதும். அதேசமயம், இருமனங்களின் இணைப்பின்றி, காதலுக்கு வாய்ப்பில்லை. தான் காதலிக்கும் நபர், காதலுக்கு மறுப்பு தெரிவித்தால், அவரை விட்டு ஒதுங்கிவிடுவதுதான் சாலச்சிறந்தது. ஏனெனில், அதுவே காதலுக்கு அவர் அளிக்கும் மரியாதை. அவரைப் பின்தொடர்வதும், கலாட்டா செய்வதும் ஏற்புடையதல்ல. தன்னைத் திருமணம் செய்யாவிட்டால் கொல்லப்போவதாகவும், தற்கொலை செய்யப்போவதாகவும் மிரட்டுவது பிளாக்மெயில் யுத்தி. பல நேரங்களில் குடும்பச் சூழ்நிலை கருதி, இளம்பெண்கள் மவுனம் சாதிக்கும்போது, இதையே வாய்ப்பாகக் கருதி, இளைஞர்கள் அவர்களைத் துன்புறுத்தும் நடவடிக்கைகளில் இறங்கிவிடுகின்றனர். இறுதியில் கொலைக்கும் அஞ்சுவதில்லை.
இப்படிப்பட்ட கொடூரப் புத்தியாளர்களை எப்படி ஒரு பெண், வாழ்க்கைத்துணையாக ஏற்றுக்கொள்ள முடியும்? இளைஞர்கள், தாங்கள் ஒருதலையாகக் காதலிக்கும் பெண்ணின் வாழ்க்கையையோ, தங்கள் வாழ்க்கையையோ எண்ணிப் பார்த்து, எதிர்காலம் சிறக்க எடுக்கும் நடவடிக்கையா இந்தக் கொலைப் பாதகம்...இளைஞர்களின் இத்தகைய எண்ணங்களால், பெண்களுக்குப் பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. நல்ல இளைஞர்கள் மீது கூட சந்தேகம் பரவுவதைத் தவிர்க்க முடியவில்லை. எதிர் பாலின ஈர்ப்பைத் தவறாகப் புரிந்துகொண்டு, வழிகாட்டுதல் இல்லாமல், அறிவுரைகளைப் புறக்கணித்து, தவறான பாதையைத் தேர்வு செய்யும் இளைஞர்கள், பட்டதாரிகளாக இருந்தாலும் அவர்கள் கற்ற கல்வியால் என்ன பயன்?சிறு வயதிலேயே விபத்தில் கால் பாதிக்கப்பட்ட தமிழக இளைஞர் மாரியப்பன், பாராலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதலில் தங்கம் வென்று சாதித்தார். தேசம் எதிர்பார்ப்பது மாரியப்பன் போன்ற இளைஞர்களைத்தான்... இளம்பெண்களைக் காவு வாங்கும் வெட்டிப்பயல்களை அல்ல!