காவிரி மேலாண் வாரியமே தீர்வு
9/6/2025 3:22:27 PM
குறைந்தபட்சம் 80 டிஎம்சி இருந்தால்தான், தஞ்சை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களுக்குச் சம்பா சாகுபடி செய்வதற்காக, மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரைத் திறக்க முடியும். தற்போது மேட்டூர் அணையில், 37 டிஎம்சி நீர் தான் இருப்பு உள்ளது. இதைக் கொண்டு சம்பா சாகுபடிக்கு நீர் திறக்க வாய்ப்பு இல்லை. தமிழக அரசு தொடர்ந்த வழக்கில், கர்நாடக அரசு தினமும் 15 ஆயிரம் கன அடி வீதம் 10 நாட்கள், தமிழகத்துக்கு நீர் திறந்துவிட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
தமிழகத்துக்குக் கர்நாடக அரசு ஆண்டுக்கு 192 டிஎம்சி நீர் வழங்க வேண்டும் என்பது காவிரி நடுவர் மன்றத்தின் உத்தரவு. அரசிதழிலும் இது வெளியானது. ஆனால், கர்நாடக அரசு, இந்த உத்தரவை உதாசீனப்படுத்துகிறது. கடந்த ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில், கர்நாடக அரசு 94 டிஎம்சி நீரை வழங்கியிருக்க வேண்டும். ஆனால், பாதியளவு கூட வழங்கவில்லை. சம்பா சாகுபடிக் காலம் துவங்கிவிட்ட நிலையில், டெல்டா விவசாயிகள், கர்நாடகாவிடம் நீரை எதிர்பார்த்து கையறு நிலையில் உள்ளனர்.
நடுவர் மன்றத் தீர்ப்பின் அடிப்படையில் நீர் தேவை எனில், காவிரிக் கண்காணிப்புக்குழுவிடம் 3 நாளில் தமிழக அரசு மனு செய்யலாம் என்று உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியிருக்கிறது. அதேசமயம், காவிரிக் கண்காணிப்புக்குழு மீது நம்பிக்கை இல்லை என்று தமிழக அரசு தெரிவித்திருக்கிறது. ‘உச்சநீதிமன்ற உத்தரவுப்படி வழங்கப்படும் நீர் யானைப்பசிக்குச் சோளப்பொரியாகத் தான் இருக்கும்’ என்கின்றனர் தமிழக விவசாயிகள். இதனால், இந்த உத்தரவுக்குத் தமிழக விவசாயிகளிடம் கடும் எதிர்ப்பு எழுந்திருக்கிறது.
காவிரிப் பிரச்னைக்கு எளிதான தீர்வு, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதுதான். இது மத்திய அரசுக்கும் தெரியும். மாநில அரசுகளுக்கும் தெரியும். வாரியம் அமைக்கப்பட்டால், அணைகள் இதன் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும். நடுவர் மன்ற உத்தரவுப்படி, நீர் திறந்துவிட முடியும். மாநில அரசுகளோ, மத்திய அரசோ தலையிட முடியாது.காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் காலம் தாழ்த்துவதற்கு, மத்திய அரசு காட்டும் பாரபட்சம் ஒரு காரணம் என்றால், இதுதொடர்பாக தமிழக அரசு போதிய அழுத்தத்தை மத்திய அரசிடம் காட்டவில்லை என்று உறுதிபடச் சொல்லலாம். காவிரிப்பிரச்னை வரும்போதெல்லாம், தமிழக அரசு அனைத்துக்கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்படும். இதையே தமிழக அரசு பொருட்படுத்துவதில்லை.காவிரிப் பிரச்னை வரும்போதெல்லாம், தமிழகம், கர்நாடகா இடையே போக்குவரத்து நிறுத்தம் உள்பட பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு விடுகிறது. இப்பிரச்னையைக் குறுகிய கண்ணோட்டத்துடன் பார்ப்பது தவறு. நீர்ப் பகிர்வில் தேசத்தின் இறையாண்மை, தமிழக அரசின் உரிமையைப் பொருட்படுத்தாத கர்நாடக அரசின் செயல்கள் கண்டனத்துக்குரியவை. அதற்கு மத்திய அரசு தூபம் போட்டுக்கொண்டிருக்க வேண்டியதில்லை.