கவுதமியை சந்திக்க நேரமில்லை - ஸ்ருதி தடாலடி
9/2/2025 4:49:26 PM
சபாஷ் நாயுடு படத்தில் கமல் மகளாக நடிக்கிறார் ஸ்ருதி ஹாசன். இப்படத்தின் காஸ்டியூம் பணியை கவுதமி கவனிக்கிறார். ஸ்ருதிக்கு காஸ்டியூம் வடிவமைக்கும்போது இருவருக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டது. இதுகுறித்து ஏற்கனவே விளக்கம் அளித்திருக்கும் ஸ்ருதி, சுதந்திரமான பெண்ணாக நடிப்பதற்கேற்ப உடைகள் அணிவதற்கு எனது எண்ணத்தை கவுதமியுடன் பகிர்ந்துகொண்டேன் என்றார்.
சில தினங்களுக்கு முன் பேட்டி அளித்த ஸ்ருதியிடம், கவுதமியை சந்தித்தீர்களா என்றபோது தடாலடி பதில் அளித்தார். அவர் கூறியது:படத்தில் எனக்கு அருமையான தோற்றம் அமைந்திருப்பதற்கு டீம் முயற்சிதான் காரணம். எங்கள் கையில் நல்ல பொருள் இருக்கிறது. அதுதான் இப்போதைக்கு தேவை. கவுதமியை சமீபத்தில் சந்தித்தீர்களா என்கிறார்கள். படப்பிடிப்பில் நான் பிஸியாக இருக்கிறேன். எனது தந்தை, தங்கை அக்ஷரா மற்றும் நண்பர்களை பார்க்கவே நேரம் சரியாக இருக்கிறது. எல்லோரையும் எல்லா நேரமும் சந்தித்துக்கொண்டிருக்க எனக்கு நேரம் இல்லை. எனது உலகில் என் தந்தை எனக்கு மிக முக்கியமானவர். அவருக்கு யாராவது முக்கியம் என்றால் அவர்களை நானும் மதிக்கிறேன்’ என்றார்.