விளையாட்டுத் துளிகள்....
9/1/2025 3:47:35 PM
ஐசிசி ஆலோசனை: இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் இடையே அமெரிக்காவில் நடந்த டி20 தொடரை 1-0 என வெஸ்ட் இண்டீஸ் கைப்பற்றியது. இதில், 2வது மற்றும் கடைசி போட்டி துவங்க, தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாக 40 நிமிடம் தாமதம் ஏற்பட்டது. இதன்பின்னர் மழை பெய்ததால், போட்டி கைவிடப்பட்டது. இந்த தாமதம் தொடர்பாக, அடுத்த மாதம் நடக்கும் போட்டி நிர்வாகிகளுக்கான வொர்க்ஷாப்பில், ஐசிசி ஆலோசனை நடத்தவுள்ளது.
கிடப்பில் மினி ஐபிஎல் திட்டம்: பிசிசிஐ தலைவர் அனுராக் தாகூர் அளித்த பேட்டி ஒன்றில், அமெரிக்காவில் மினி ஐபிஎல் நடத்தும் திட்டம் தற்போதைக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. நேர வித்தியாசமே, அமெரிக்காவில் போட்டியை நடத்த பெரும் தடையாக உள்ளது என்றார்.
விஜேந்தர் சிங் வலியுறுத்தல்: ரியோ ஒலிம்பிக் போட்டியில் இந்திய குத்துச்சண்டை வீரர்கள் ஒருவர் கூட பதக்கம் வெல்லவில்லை. அதிகபட்சமாக விகாஸ் கிருஷ்ணன் மட்டும் காலிறுதிக்கு முன்னேறினார். இதனால் முழுமையான மறு சீரமைப்பு தேவை என பெய்ஜிங் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற இந்திய குத்து சண்டை வீரர் விஜேந்தர் சிங் வலியுறுத்தியுள்ளார்.
சாய்னா பயிற்சியாளர் வேதனை: ரியோ ஒலிம்பிக்கில் இந்தியாவின் முன்னணி பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நெஹ்வால், காயம் காரணமாக தோல்வியடைந்தார். பின்னர் அவருக்கு அறுசை சிகிச்சை செய்யப்பட்டது. இது குறித்து அவரது பயிற்சியாளர் விமல் குமார் கூறுகையில், தவறான நேரத்தில் சாய்னா நெஹ்வாலுக்கு காயம் ஏற்பட்டு விட்டது. காயத்துடனே அவர் விளையாடினார் என்றார்.
ரஷ்யாவின் அப்பீல் தள்ளுபடி: பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோ நகரில், வரும் 7ம் தேதி பாராலிம்பிக் போட்டிகள் துவங்குகிறது. இதில், ஊக்க மருந்து சர்ச்சையில் சிக்கிய ரஷ்யா கலந்து கொள்ள, சர்வதேச பாராலிம்பிக் கமிட்டி தடை விதித்தது. இதை எதிர்த்து ரஷ்யா செய்த அப்பீலை, விளையாட்டுகளுக்கான மத்தியஸ்த நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. கடைசி வாய்ப்பாக சுவிட்சர்லாந்து சுப்ரீம் கோர்ட்டில் ரஷ்யா செய்த அப்பீலும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதனால் போட்டி பாராலிம்பிக்கை நடத்த ரஷ்யா முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.