கடன் தொல்லையால் வாலிபர் தற்கொலை
7/28/2016 5:06:12 PM
ஆவடி, -ஆவடி அருகே அயப்பாக்கம், மாருதிராம் நகர், சீனிவாசா தெருவை சேர்ந்தவர் துரைமுருகன் (37). அம்பத்தூர் அடுத்த மண்ணூர்பேட்டையில் வெல்டிங் பட்டறை நடத்தி வந்தார்.இவரது மனைவி கோமதி. இத்தம்பதிக்கு 2 மகன்கள். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் துரைமுருகன் கடன் வாங்கி, தனது வெல்டிங் பட்டறையை விரிவாக்கம் செய்திருந்தார்.அதன்பிறகு வெல்டிங் பட்டறையில் சரியாக வேலை இல்லாததால் துரைமுருகனுக்கு கடன் தொல்லை அதிகமானது. இதனால் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் தனது பட்டறையை மூடிவிட்டார்.இதையடுத்து, அதே பகுதியில் தினக்கூலி அடிப்படையில் துரைமுருகன் வெல்டராக பணியாற்றி வந்தார். அவருக்கு கடன் கொடுத்தவர்கள் பணத்தை கேட்டு அடிக்கடி துரைமுருகனுக்கு நெருக்கடி கொடுத்தனர்.இதில் மனமுடைந்த துரைமுருகன் நேற்று முன்தினம் இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.இதுகுறித்து தகவலறிந்ததும் திருமுல்லைவாயல் போலீஸ் எஸ்ஐ முத்துராஜ் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தார். அங்கு துரைமுருகனின் சடலத்தை கைப்பற்றி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.