ஆசிரிய குடும்பத்தில் இருந்து ஒரு மல்யுத்த வீரர்
7/26/2016 5:33:11 PM
2006ம் ஆண்டு ேதாஹா ஆசிய விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ள, விமானம் ஏறுவதற்கு சில நாட்களே இருந்த நிலையில், யோகேஸ்வர் தத்தின் தந்தை ராம் மேகர் திடீரென உயிரிழந்தார். அதே நேரத்தில் யோகேஸ்வர் தத்துக்கு முழங்காலில் காயமும் ஏற்பட்டிருந்தது. உடல் மற்றும் மன ரீதியான இந்த வலிகளை எல்லாம் தாங்கி கொண்டு புறப்பட்ட யோகேஸ்வர் தத், 60 கிலோ ப்ரீ ஸ்டைல் பிரிவில், வெண்கல பதக்கத்துடன் நாடு திரும்பினார்.
தொடர்ந்து பல பதக்கங்களை வென்றாலும், ஒலிம்பிக்கில் யோகேஸ்வர் தத்தால் சொல்லிக்கொள்ளும்படி சாதிக்க முடியவில்லை. முதல் முறையாக கலந்து கொண்ட 2004 ஏதென்ஸ் ஒலிம்பிக், 2008 பெய்ஜிங் ஒலிம்பிக் ஆகியவற்றில் ஏமாற்றமே மிஞ்சியது.
இந்த அனுபவங்களுடன் போராடிய அவருக்கு 2012 லண்டன் ஒலிம்பிக் சிறப்பாக அமைந்தது. வெண்கல பதக்கத்துக்கான போட்டியில், வட ெகாரியாவின் ரி ஜாங் மியாங்கை வீழ்த்தி, பதக்கம் வென்றார் யோகேஸ்வர் தத். இதன் மூலம் கே.டி.ஜாதவ் (1952), சுஷில் குமார் (2008,2012) ஆகியோருக்கு பிறகு ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற 3வது இந்திய மல்யுத்த வீரர் என்ற சாதனையை படைத்தார். கஜகஸ்தானின் அஸ்டானாவில் நடந்த ஏசியன் குவாலிபிகேஷன் போட்டிகளில், வெள்ளி பதக்கம் வென்றதன் மூலம் லண்டன் ஒலிம்பிக்குக்கு யோகேஸ்வர் தத் தகுதி பெற்றிருந்தார். தற்போது அதே போட்டியில் தங்கம் வென்றதன் மூலம் ரியோ ஒலிம்பிக் டிக்கெட்டை பெற்றுள்ளார். இதில், 65 கிலோ எடைப்பிரிவில் யோகேஸ்வர் தத் கலந்து கொள்கிறார். ‘இது எனது 4வது மற்றும் கடைசி ஒலிம்பிக். தங்க பதக்கத்துடன் நாடு திரும்ப விரும்புகிறேன். இதற்காக தினசரி 6 மணி நேரத்திற்கு மேலாக பயிற்சி செய்து கொண்டுள்ளேன். ரியோ ஒலிம்பிக்கில் மறக்க முடியாத அனுபவம் கிடைக்க வேண்டும் என விரும்புகிறேன்’ என்கிறார் யோகேஸ்வர் தத். ஹரியானா மாநிலம் ேசானிபட் மாவட்டத்தில் உள்ள கோஹானா கிராமம் இவரது சொந்த ஊர். யோகேஸ்வர் தத்தின் தந்தை ராம் மேகர், தாய் சுசிலா தேவி இருவருமே ஆசிரியர்கள். இவரது தாத்தா ராத்தி ராமும் ஆசிரியர்தான். இளம் வயதில் யோகேஸ்வர் தத்துக்கு கவிதை எழுதும் திறனும் இருந்தது. இதனால் தங்கள் வழியை பின்பற்றி மகனும் ஆசிரியராக வேண்டும் என்றே அவரது பெற்றோர் விரும்பினர். ஆனால் அதே ஊரை சேர்ந்த மல்யுத்த வீரரான பல்ராஜ் பெஹ்ல்வான் என்பவரால் ஈர்க்கப்பட்டு, 8 வயதில் மல்யுத்தம் விளையாட துவங்கினார் யோகேஸ்வர் தத். பள்ளி அளவிலான போட்டிகளில் நம்ப முடியாத வகையில் சிறப்பாக செயல்பட்டார். இதன் பின் அவரை மல்யுத்த வீரராக்க பெற்றோரும் முடிவு செய்தனர். இதன் பலன், இன்று இந்தியாவில் அனைவராலும் அறியப்படும் வீரராக உயர்ந்து நிற்கிறார் யோகேஸ்வர் தத்.
தற்போது 34 வயதாகும் யோகேஸ்வர் தத்துக்கு ரியோ ஒலிம்பிக், அவ்வளவு எளிதாக அமையும் என்று சொல்லி விட முடியாது. காரணம் காயங்கள். அவருக்கு உடல் முழுவதும் 5 அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளது. காயங்களுக்கு இடையேயும் டயட் மாற்றியமைப்பு, ஸ்டெமினாவை தக்க வைக்க நடவடிக்கை, தீவிர பயிற்சி என புத்துணர்ச்சி பெற்றுள்ள யோகேஸ்வர் தத், பதக்கத்துடன் திரும்ப வாழ்த்துக்கள்.