திருமுல்லைவாயல் பகுதியில் துணை மின்நிலையம் அமைக்க கோரிக்கை ஜமாபந்தியில் புரட்சி பாரதம் மனு
6/9/2025 2:21:39 PM
ஆவடி: ஆவடி நகராட்சி 8வது வார்டு கவுன்சிலரும் புரட்சி பாரதம் கட்சியின் மாநில துணை பொது செயலாளருமான முல்லை பலராமன், நேற்று ஆவடி தாலுகா அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்ச்சியில், மாவட்ட கலெக்டர் சுந்தரவள்ளியிடம் கோரிக்கை மனு அளித்தார்.அம்மனுவில் முல்லை பலராமன் கூறியிருப்பதாவது:ஆவடி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சுமார் ஒரு லட்சம் மக்கள் வசிக்கின்றனர். மேற்கண்ட பகுதிகளுக்கு ஆவடி துணை மின் நிலையத்தில் இருந்து பல ஆண்டுகளாக மின் வினியோகம் செய்யப்படுகிறது. இங்கு வீடுகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், இப்பகுதியில் மின்தேவையும் அதிகரித்துள்ளது.கடந்த சில ஆண்டுகளாக இப்பகுதியில் குறைந்த மின் அழுத்தத்தினால் வீடுகளில் மின்சாதன பொருட்கள் பழுதாகிவிடுகின்றன. மேலும், இரவு நேரங்களில் மாணவ-மாணவிகளின் படிப்பும் பாதிக்கப்படுகிறது. எனவே, திருமுல்லைவாயல் பகுதியில் உடனடியாக துணை மின்நிலையம் அமைக்க மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.