மழைக்கால கூட்டத்தொடரில் ஜிஎஸ்டி மசோதா நிறைவேறும்: அருண்ஜெட்லி நம்பிக்கை
5/26/2016 2:20:16 PM
புதுடெல்லி: மழைக்கால கூட்டத்தொடரில் சரக்கு மற்றும் சேவை வரி மசோதா நிச்சயம் நிறைவேறும் என மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி நம்பிக்ைக தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் ஒரே மாதிரியான வரிவிதிப்புக்கு வகை செய்யும் சரக்கு மற்றும் சேவை வரி மசோதா கடந்த காங்கிரஸ் அரசின் இறுதி காலத்தில் உருவாக்கப்பட்டது. தமிழகம் உள்ளிட்ட ஒரு சில மாநிலங்கள் எதிர்ப்பு காரணமாக இந்த மசோதா அப்போது நிறைவேற்றப்படவில்லை. மத்தியில் பாஜ ஆட்சிக்கு வந்த பின்னர் ஒரு சில திருத்தங்களுடன் புதிய மசோதா தயாரானது. இதற்கு மக்களவை அனுமதியும் அளித்தது. மாநிலங்களவையில் பாஜ கூட்டணிக்கு பெரும்பான்மை இல்லாத காரணத்தால் கடந்த குளிர்கால கூட்டத்தொடரிலும், இந்த ஆண்டு துவக்கத்தில் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரிலும் மசோதாவை நிறைவேற்ற முடியவில்லை. இந்நிலையில் அண்மையில் நடைபெற்ற 5 மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது.
மேலும் மே மாதத்துடன் 55 மாநிலங்களவை எம்பிக்கள் பதவி காலியாகிறது. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 17 எம்பிக்களின் பதவிக்காலமும் முடிவுக்கு வருகிறது. புதிய எம்பிக்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வரும் ஜுன் மாதத்தில் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் பாஜ மற்றும் அதன் கூட்டணி கட்சிக்கு கூடுதல் எம்பிக்கள் கிடைப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் மேற்கு வங்கத்தில் அமோக வெற்றி பெற்றுள்ள மம்தா பானர்ஜி,ஜிஎஸ்டி மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். காங்கிரஸ் தவிர மற்ற எதிர்கட்சிகள் அனைத்தும் இந்த மசோதாவுக்கு ஆதரவாக இருப்பதால் வரும் மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே இந்த மசோதாவை மாநிலங்கள் அவையில் அறிமுகம் செய்து வாக்கெடுப்பு நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் இந்த வரிவிதிப்பு முறை நாடு முழுவதும் அமல்படுத்தப்பட வேண்டும் என்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது. ஜிஎஸ்டி மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படுவதுடன் பாதிக்கும் மேற்பட்ட மாநில சட்டசபைகளிலும் நிறைவேற்றப்பட வேண்டும்.
அரசியல் அமைப்பு சட்டதிருத்த மசோதா என்பதால் காங்கிரஸ் ஒத்துழைப்புடன் இந்த மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு இதுநாள் வரை முயற்சித்து வந்தது. தற்போது 5 மாநில தேர்தல் முடிவுகள் காங்கிரசுக்கு பெருத்த பின்னடைவை ஏற்படுத்தியிருப்பதை தொடர்ந்து இந்த ஆண்டுக்குள் மசோதாவை எப்படியும் நிறைவேற்றிட வேண்டும் என மத்திய அரசு உறுதியாக உள்ளது. மழைக்கால கூட்டத்தொடரில் ஜிஎஸ்டி மசோதா நிறைவேறுவது உறுதி என மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.