கடந்த 2 ஆண்டுகளில் அதிகபட்ச சீர்திருத்தம் மேற்கொண்டுள்ளோம்: பிரதமர் மோடி பேட்டி
5/26/2016 2:19:22 PM
புதுடெல்லி: பாஜ ஆட்சிக்கு வந்த 2 ஆண்டுகளில் அதிகபட்ச சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம் என அமெரிக்க பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.கடந்த 2014ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் அமோக வெற்றிபெற்று பாஜ ஆட்சியை பிடித்தது. ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் நிறைவுபெற்றுள்ள நிலையில், பிரதமர் மோடி அமெரிக்க பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டி: நாட்டை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்லும் பொருட்டு, குறிப்பிடத்தக்க வகையில் சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். முந்தைய ஆட்சியின் செயல்பாடுகளால் தற்போது மாற்றங்களை கொண்டுவருவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. என்னுடைய தலைமையிலான ஆட்சியில் அதிகளவிலான திட்டங்களை செயல்படுத்தி உள்ளோம்.
வெளிநாட்டு முதலீடு, ஊழலை கட்டுப்படுத்துவது, கிராமப்புறங்களில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது போன்றவற்றால் நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி அடையும். சரக்கு மற்றும் சேவை வரி மசோதாவை (ஜிஎஸ்டி) நிறைவேற்றுவதன் மூலம் பெரிய அளவிலான சீர்திருத்தம் ஏற்படும். நாடு முழுவதும் ஒரே மாதிரியானா வரிவிதிப்பு என்பதே இந்த மசோதாவின் நோக்கம். இந்தாண்டுக்குள் ஜிஎஸ்டி மசோதா நிறைவேறும் என எதிர்பார்க்கிறேன். இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.