ஜூன் 20ல் கவுன்சலிங் துவக்கம்: மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பம் விநியோகம்: மாணவ, மாணவிகள் குவிந்தனர்
5/26/2016 2:18:26 PM
சென்னை: எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் தமிழகம் முழுவதும் உள்ள 20 அரசு மருத்துவக் கல்லூரிகளில் இன்று துவங்கியது. மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் நீண்ட வரிசையில் நின்று விண்ணப்ப படிவங்களை வாங்கினர். முதல்கட்ட கவுன்சலிங் ஜூன் 20ம் தேதி துவங்குகிறது.
தமிழகத்தில் உள்ள 20 அரசு மருத்துவ கல்லூரிகளில் மொத்தம் 2,650 இடங்கள் உள்ளன. இதில் மாநில அரசு ஒதுக்கீடு 2,253 இடங்களும், மத்திய அரசு ஒதுக்கீடாக 397 இடங்களும் உள்ளன. இதேபோல், 6 சுயநிதி கல்லூரிகளில் மொத்த இடங்கள் 760. இதில் மாநில அரசு ஒதுக்கீடு 470, நிர்வாக ஒதுக்கீடு 290. கே.கே.நகர் இஎஸ்ஐ மருத்துவ கல்லூரியில் 100 இடங்கள் உள்ளது. இதில் மாநில அரசு ஒதுக்கீடாக 65 இடங்கள் உள்ளன.இதேபோல், அரசு பல் மருத்துவ கல்லூரியில் 100 இடங்கள் உள்ளன. இதில் மாநில அரசு ஒதுக்கீடு 85, மத்திய அரசு ஒதுக்கீடு 15. தமிழகத்தில் உள்ள 17 சுயநிதி பல் மருத்துவ கல்லூரியில் மொத்தம், 1,610 இடங்கள் உள்ளன. இதில் கல்லூரி நிர்வாக ஒதுக்கீடு 640, மாநில அரசு ஒதுக்கீடு 970 இடங்கள் உள்ளது.
மாநில அரசு ஒதுக்கீட்டுக்கான இடங்கள் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படும்.அதன்படி தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் கலந்தாய்வு நடத்தி மருத்துவ படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. இதற்கிடையே மருத்துவ படிப்புகளுக்கு நாடு முழுவதும் பொது நுழைவுத்தேர்வு நடத்த வேண்டும் என்று கடந்த மாதம் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் நட்டா ஆலோசனை நடத்தி, இந்த ஆண்டு மட்டும் நுழைவுத்தேர்வை தள்ளி வைக்க மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வரும் என உறுதி அளித்தார். அதன்படி கடந்த சில நாட்களுக்கு முன் இதற்கு அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டு, அதற்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியும் ஒப்புதல் அளித்தார்.
இதை தொடர்ந்து, தமிழகத்தில் இந்தாண்டு மட்டும் கலந்தாய்வு மூலம் மருத்துவ படிப்புக்கான மாணவர்கள் சேர்க்கை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி தமிழகம் முழுவதும் உள்ள 20 அரசு மருத்துவ கல்லூரிகள் மற்றும் ஒரு அரசு பல் மருத்துவ கல்லூரியில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு கலந்தாய்வுக்காக இன்று விண்ணப்ப விநியோகம் துவங்கியது. அந்தந்த மருத்துவக்கல்லூரி டீன்கள் விண்ணப்ப விநியோகத்தை துவக்கி வைத்தனர். மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் நீண்ட வரிசையில் நின்று விண்ணப்பங்களை வாங்கினர். மேலும் விண்ணப்ப படிவங்களை www.tnhealth.org என்ற இணையதளத்திலிருந்தும் டவுன்லோடு செய்து கொள்ளலாம். 40 ஆயிரம் விண்ணப்பங்கள் அச்சிடிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது. தேவைப்பட்டால் கூடுதல் விண்ணப்பங்கள் அச்சடிக்கவும் மருத்துவக் கல்வி இயக்ககம் முடிவு செய்துள்ளது.விண்ணப்பங்களை ஜூன் மாதம் 6ம் தேதி 5 மணி வரை விண்ணப்பங்கள் நேரடியாகவும், இணையதளத்தின் மூலமாகவும் பெற்றுகொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் ஜூன் 7ம் தேதி மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். தரவரிசை பட்டியல் ஜூன் 17ம் தேதி வெளியிடப்படும். முதற்கட்ட கவுன்சலிங் ஜூன் 20 முதல் 25ம் தேதி வரை நடைபெறும். 2ம் கட்ட கவுன்சலிங் ஜூலை 18ம் தேதி நடைபெறும். கவுன்சலிங் முடிந்த பிறகு ஆகஸ்ட் 1ம் தேதி முதல் கல்லூரிகள் தொடங்கும்.
மாநில அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர கவுன்சலிங்கிற்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் மத்திய அரசு ஒதுக்கீட்டில் சேர நீட் தேர்வையும்(மருத்துவ படிப்புக்கான நுழைவு தேர்வு) எழுதலாம் என்பது குறிப்பிடத்தக்கது.விண்ணப்பம் கிடைக்கும் இடங்கள்: சென்னையில் சென்னை மருத்துவக் கல்லூரி, ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, கீழ்பாக்கம் மருத்துவக்கல்லூரி, ஓமாந்தூர் எஸ்டேட் அரசு மருத்துவக் கல்லூரி, தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மதுரை, தஞ்சை, செங்கல்பட்டு, திருநெல்வேலி, கோவை, சேலம், திருச்சி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, வேலூர், தேனி, தர்மபுரி, திருவாரூர், விழுப்புரம், சிவகங்கை, திருவண்ணாமலை ஆகிய இடங்களில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படுகின்றன. தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விண்ணப்பம் விநியோகிக்கப்படும்.
எஸ்.சி, எஸ்.டி பிரிவினர் தங்களது ஜாதி சான்றிதழை நகல் எடுத்து கொடுத்தால் விண்ணப்பங்கள் இலவசமாக வழங்கப்படும். எம்.பி.சி, பி.சி உள்ளிட்ட பிரிவினர் செயலாளர், தேர்வு குழு, கீழ்ப்பாக்கம் என்ற முகவரிக்கு ரூ.500யை டிடியாக எடுத்து கொடுத்து விண்ணப்பத்தை பெற்று கொள்ளலாம்.