பெங்களூர் வெற்றி பெறுவோம் என நினைக்கவில்லை டிவில்லியர்சை வணங்குகிறேன்: விராட் கோஹ்லி உற்சாகம்
5/25/2016 5:06:39 PM
பெங்களூர்: ஐபிஎல் தொடரில் பிளே ஆப் சுற்று போட்டிகள் நேற்று துவங்கியது. பெங்களூரில் இரவு நடந்த குவாலிபயர்-1 போட்டியில், ராயல் சேலஞ்சர்ஸ் ெபங்களூர்-குஜராத் லயன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற பெங்களூர் பவுலிங்கை தேர்வு செய்தது. இதன்பின் களமிறங்கிய குஜராத், 20 ஓவர்களில் 158 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. டிவைன் ஸ்மித் 73 ரன் (41 பந்துகள், 5 பவுண்டரி, 6 சிக்சர்) எடுத்தார். கேப்டன் ரெய்னா 1, மெக்கல்லம் 1, பின்ச் 4 ரன் என முன்னணி பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். பெங்களூர் தரப்பில் வாட்சன் 4, இக்பால் அப்துல்லா, ஜோர்டான் தலா 2, சஹால் ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
இதன்பின் களமிறங்கிய பெங்களூர் துவக்கத்தில் 29 ரன்னுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. குஜராத்தை போலவே பெங்களூர் அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களும் ஏமாற்றம் அளித்தனர். கெய்ல் 9, ஷேன் வாட்சன் 1, கோஹ்லி, லோகேஷ் ராகுல், சச்சின் பேபி ஆகியோர் டக் அவுட்டாகினர். ஆனால் டிவில்லியர்ஸ், இக்பால் அப்துல்லா ஜோடி போராடி வெற்றி தேடி தந்தது. 18.2 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 159 ரன் எடுத்து, பெங்களூர் வெற்றி பெற்று, பைனலுக்குள் நுழைந்தது. டிவில்லியர்ஸ் 79 (47 பந்துகள், 5 பவுண்டரி, 5 சிக்சர்), இக்பால் அப்துல்லா 33 ரன்னுடன் (25 பந்துகள், 3 பவுண்டரி, 1 சிக்சர்) களத்தில் இருந்தனர். இதன் மூலம் பெங்களூர் அணி பைனலுக்கு நேரடியாக தகுதி பெற்றது.
வெற்றி குறித்து பெங்களூர் கேப்டன் விராட் கோஹ்லி கூறுகையில், நம்ப முடியாத வெற்றி. வெற்றி பெற்ற அணியின் கேப்டனாக நான் இங்கே நிற்பேன் என நினைத்து கூட பார்க்கவில்லை. யார் உலகின் சிறந்த பேட்ஸ்மேன் என்ற விவாதத்தை இது ஏற்படுத்தியுள்ளது. மிகவும் அழுத்தமான சூழ்நிலையில், மிகச்சிறந்த ஒரு ஆட்டத்தை டிவில்லியர்சிடம் இருந்து பார்த்தேன். அவருக்கு வணங்கி நன்றி தெரிவித்து கொள்கிறேன். அப்துல்லாவுக்கும் பாராட்டுக்கள். பிளே ஆப் பெங்களூரில் நடந்தது. பைனலும் பெங்களூரில் நடக்க போகிறது. நாங்களும் பைனலுக்கு முன்னேறி விட்டோம். இது பெங்களூர் மக்களுக்கானது என்றார்.
தோல்வி குறித்து குஜராத் கேப்டன் ரெய்னா கூறுகையில், துவக்கத்தில் நாங்கள் நன்றாகதான் பவுலிங் செய்தோம். ஆனால் இந்த மைதானத்தில் அதன்பின் என்ன நடக்கும் என்று தெரியாது. டிவில்லியர்சின் பேட்டிங் அபாரமாக இருந்தது. நாங்களும் 9 ரன்னுக்கு 3 விக்கெட்டுகளை இழந்திருந்த நிலையில், ஸ்மித்தின் பேட்டிங் நன்றாக இருந்தது. 160 என்பது கட்டுப்படுத்தக்கூடிய ஸ்கோர்தான். குல்கர்னி சரியான திசைகளில் பந்து வீசினார். கெய்ல், கோஹ்லி, ராகுல் என அனைவரின் விக்கெட்டுகளை வீழ்த்தி விட்டபோதும், எங்களுக்கு அதிர்ஷ்டம் இல்லை என நினைக்கிறேன். டெல்லியில் நடக்கும் குவாலிபயர்-2 போட்டியில் வெற்றி பெற்று, மீண்டும் இங்கே வருவோம் என்றார்.
ஆட்ட நாயகன் விருது வென்ற டிவில்லியர்ஸ் கூறுகையில், ஸ்மித் ஓவர் வரை, வழக்கமான ஷாட்களைதான் ஆடிக்கொண்டிருந்தேன். இங்கே ரசிகர்களின் ஆதரவை பற்றி குறிப்பிட வேண்டுமென்றால், எனது வாழ்க்கையில் நான் கேட்டதிலேயே, மிகப்பெரிய சத்தம் இதுதான். குல்கர்னியின் ஸ்பெல் அபாரமாக இருந்தது. இதற்காக அவருக்கு வாழ்த்து தெரிவித்து கொள்கிறேன் என்றார்.
கனவு நிறைவேறுமா: பெங்களூர் அணி இதற்கு முன்னதாக 2009, 2011ம் ஆண்டுகளில் பைனலுக்கு முன்னேறியுள்ளது. ஆனால் முறையே டெக்கான் சார்ஜர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளிடம் (இரண்டு அணிகளும் தற்போது இல்லை) தோல்வியை தழுவியுள்ளது. பெங்களூர் அணியின் கோப்பை வெல்லும் கனவு இம்முறையாகவது நிறைவேறுமா? என்பது 29ம் தேதி தெரிந்து விடும்.
ரன் மெஷினை கட்டுப்படுத்திய குஜராத்: பெங்களூர் கேப்டன் விராட் கோஹ்லி சூப்பர் பார்மில் உள்ளார். ஆனால் நேற்றைய போட்டியில் அவர் குல்கர்னி பந்து வீச்சில் டக் அவுட்டானார். 51 இன்னிங்சுகளுக்கு பிறகு அவர் டக் அவுட்டாகியுள்ளார். கடைசியாக கடந்த 2014 ஐபிஎல்லில்
பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் கோஹ்லி டக் அவுட்டாகியிருந்தார். இதனிடையே டிவில்லியர்ஸ்-இக்பால் அப்துல்லா ஜோடி 7வது விக்கெட்டுக்கு 91 ரன் சேர்த்து, வெற்றி தேடி தந்தது. ஐபிஎல் வரலாற்றில் 7வது விக்கெட்டுக்கு சேர்க்கப்பட்ட 2வது அதிகபட்ச ரன்கள் இது.