டெல்லியில் இன்று ஐபிஎல்எலிமினேட்டர் ஆட்டம்: நைட் ரைடர்சுடன் சன்ரைசர்ஸ் பலப்பரீட்சை
5/25/2016 5:05:49 PM
புதுடெல்லி: 9வது ஐ.பி.எல்.தொடரில் லீக் சுற்று முடிவில் புள்ளி பட்டியலில் 3வது இடத்தை பிடித்த சன்ரைசர்ஸ் ஐதராபாத்தும், 4வது இடம் பெற்ற கொல்கத்தா நைட் ரைடர்சும் எலிமினேட்டர் ஆட்டத்தில் இன்று மோதுகின்றன. டெல்லி பெரோஸ்ஷா கோட்லா மைதானத்தில் இரவு 8 மணிக்கு நடக்கும் இந்த போட்டியில் வெல்லும் அணி, இறுதிப்போட்டிக்கான 2வது தகுதி சுற்றில் குஜராத் அணியுடன் நாளை மறுநாள் விளையாடும்.
இந்த தொடரில் ஆரம்பம் முதலே சன்ரைசர்ஸ் சிறப்பாக ஆடி வருகிறது.
கேப்டன் வார்னர் சூப்பர் பார்ம்மில் உள்ளார். 7 அரைசதத்துடன் அவர் 658 ரன் விளாசி உள்ளார். மற்றொரு துவக்க வீரர் தவான் 463 ரன் எடுத்துள்ளார். யுவராஜ்சிங், வில்லியம்சன், ஹென்ரிக்ஸ் தீபக் ஹூடா, நமன் ஓஜா என வலுவான பேட்டிங் வரிசை உள்ளது. மற்ற அணிகளை விட பந்துவீச்சில் வலுவாக உள்ளது சன்ரைசர்ஸ்தான். வேகப்பந்து வீச்சாளர்கள் முஸ்தாபிஜூர் ரகுமான் 16, புவனேஸ்வர்குமார் 18 , பரிந்தர் ஸ்ரன் 12 விக்கெட்டுகள் எடுத்துள்ளனர்.
மறுபுறம் தட்டுதடுமாறி பிளேஆப் சுற்றுக்குள் நுழைந்துள்ள கொல்கத்தாவும் வெற்றிபெறும் உத்வேகத்தில் உள்ளது. கேப்டன் கம்பீர், ராபின் உத்தப்பா, யூசுப்பதான், மனிஷ்பாண்டே என பேட்டிங் வரிசை பலமாக உள்ளது. சுழலில் சுனில் நரேன் வலுசேர்க்கிறார். டெல்லி மைதானம் சுழலுக்கு சாதகமாக இருக்கும்என கணிக்கப்பட்டுள்ளதால் ஆதிக்கம் செலுத்தலாம். லீக் சுற்றில் இருஅணிகளும் மோதிய 2 போட்டியிலும் கொல்கத்தாவே வென்றுள்ளது.
அதற்கு பழிதீர்க்கும் வகையில் சன்ரைசர்ஸ் களம் இறங்குவதால் போட்டியில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.