கட்டாக் பாரபட்டி ஸ்டேடியத்துக்கு விரைவில் டெஸ்ட் அந்தஸ்து: ஓசிஏ நம்பிக்கை
5/24/2016 4:39:46 PM
புவனேஸ்வர்: ஒடிசா மாநிலம் கட்டாக்கில் உள்ள பாரபட்டி கிரிக்கெட் ஸ்டேடியம் இன்னும் 2-3 மாதங்களில், டெஸ்ட் அந்தஸ்தை மீண்டும் பெறும் என, ஒடிசா கிரிக்கெட் சங்க செயலாளர் (ஓசிஏ) அசிர்பாத் பெகிரா கூறியுள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், இன்னும் 2-3 மாதங்களில் பாரபட்டி ஸ்டேடியம் மீண்டும் டெஸ்ட் போட்டிகளை நடத்துவதற்கான அந்தஸ்தை பெறும். இதற்கான பணிகள் பாட்டில் வீச்சு சம்பவம் காரணமாக தாமதமாகியுள்ளது (கடந்தாண்டு அக்டோபரில் நடந்த இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான போட்டியின்போது, பாரபட்டி மைதானத்திற்குள் தண்ணீர் பாட்டில்களை வீசி
ரசிகர்கள் ரகளையில் ஈடுபட்டனர்). தற்போது இந்த விவகாரம் முடிவுக்கு வந்துள்ளது. இதனால் பாரபட்டி ஸ்டேடியத்துக்கு டெஸ்ட் அந்தஸ்து கிடைத்து விடும் என்ற நம்பிக்கையில் உள்ளோம். பாரபட்டியில் எதிர்காலத்தில் நடக்கும் போட்டிகளின்போது, தண்ணீர் பாட்டில்களை கேலரிக்குள் எடுத்து செல்ல அனுமதி வழங்கப்படாது என்றார்.