ராஜீவ்காந்தி நினைவு நாளை முன்னிட்டு மாநகராட்சி பள்ளியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ரூ. 2.75 லட்சம் பரிசு ராயபுரம் மனோ வழங்கினார்
5/23/2016 3:08:23 PM
சென்னை: வடசென்னை மாவட்ட காங்கிரஸ் சார்பில், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவு நாளை முன்னிட்டு, சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பிளஸ் 2 பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடிக்கும் மாணவ, மாணவிகளை ஊக்குவிக்கும் வகையில் ஆண்டுதோறும் ரொக்க பரிசு வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த ஆண்டு பிளஸ் 2 பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி ஜி.ஏ.ரோடு மரகதம் மாளிகையில் நடைபெற்றது.
இதில், சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 1166 மதிப்பெண் பெற்று முதல் இடத்தை பிடித்த சொப்னாவுக்கு ரூ.1லட்சமும், 1157 மதிப்பெண் பெற்று இரண்டாம் இடத்தை பிடித்த மாணவிகள் புவனேஷ்வரி, ராமலட்சுமி ஆகியோருக்கு தலா ரூ.50 ஆயிரமும், 1155 மதிப்பெண் பெற்று 3ம் இடத்தை பிடித்த மாணவிகள் தரணி, ஜோதிப்பிரியா, சஞ்சனா ஆகியோருக்கு தலா ரூ.25ாயிரமும் மொத்தம் ரூ.2,75,000 ரொக்க பரிசை வடசென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராயபுரம் ஆர்.மனோ வழங்கினார்.இந்நிகழ்ச்சியில், முன்னாள் மாவட்ட தலைவர்கள் துரைராஜ், குப்புசாமி, எர்னஸ்ட் பால், முன்னாள் பொதுச் செயலாளர் ஜோதி ராமலிங்கம், மாவட்ட பொருளாளர் கண்ணன், தலைமை நிலைய செயலாளர் மோகன், செய்தி தொடர்பாளர் வெங்கடேசன், சர்கிள் தலைவர்கள் கிருஷ்ணராஜ், ரூப்சந்தர், வட்ட தலைவர் சபரிநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.