புழல்-கிராண்ட்லைனில் முடிக்கப்படாத அரைகுறை மேம்பாலப் பணி ஓரு பக்க சுவரில் விரிசல்
5/23/2016 2:34:27 PM
புழல்: சென்னைக்கு குடிநீர் வழங்கும் புழல் ஏரியின் உபரிநீர் செல்லும் கால்வாய் உள்ளது. புழல்-கிராண்ட்லைன் இணைக்கும் பகுதியில் பல ஆண்டுகளாக பாலம் இல்லாததால், மழைக் காலத்திலும் உபரிநீர் திறந்துவிடும் காலத்திலும் அப்பகுதியைச் சுற்றியுள்ள 25-க்கும் மேற்பட்ட நகர்பகுதி பொதுமக்கள் சாலையைப் பயன்படுத்த முடியாமல் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இக்காலத்தில் செங்குன்றம் வரை சென்று சுற்றி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் விரைவிலேயே பாலம் கட்டக் கோரி கிராண்ட்லைன் ஊராட்சி சார்பில் கோரிக்கை விடுத்தனர்.தமிழக ஊரக வளர்ச்சி துறை மற்றும் உள்ளாட்சி துறை சார்பில் நபார்டு திட்டத்தின்கீழ், புழல் ஏரி உபரிநீர் கால்வாய்மீது மேம்பாலம் கட்டும் பணி ₹2.85 கோடி மதிப்பீட்டில் கடந்த பிப்ரவரி மாதம் பணிகள் துவங்கியது.
ஆனால், அப்பணிகள் தற்போது மந்தகதியில் உள்ளது. மேலும், அங்கு தரமற்ற முறையில் கட்டப்பட்ட புதிய மேம்பாலத்தின் ஒரு பக்கச் சுவர்களில் தற்போது விரிசல் ஏற்பட்டுள்ளது.இதுகுறித்து கிராண்ட்லைன் ஊராட்சி தலைவர் ஏழுமலை கூறுகையில், ‘இந்த மேம்பாலத்தை சரியான முறையில், வரும் மழைக் காலத்துக்குள் கட்ட வேண்டும். இப்பணிகளை மிக விரைவில் தரமான முறையில் முடித்தால், இப்பகுதி மக்கள் பயன்பாட்டுக்கு எளிதில் உதவும். இல்லாவிட்டால், அப்பகுதி மக்கள் சுமார் 5 கிமீ தூரம் சுற்றிவர வேண்டியிருக்கும். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து, இப்பாலப் பணிகளை தரமான முறையில் உடனடியாக முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று ஏழுமலை கோரிக்கை விடுத்துள்ளார்.