குறைவான கூலி உயர்வுக்கு எதிர்ப்பு பிரதமர் மோடிக்கு ரூ. 5 அனுப்பிய கிராம மக்கள் ஜார்கண்டில் பரபரப்பு
5/2/2025 2:21:38 PM
லதேகார்: ஜார்கண்டில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் ரூ.5 சம்பள உயர்வு அறிவித்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் ரூ.5 ஐ பிரதமர் மோடிக்கு தபாலில் அனுப்பி வைத்து போராட்டம் நடத்தினர்.தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் ஜார்கண்டில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கூலியை ரூ.162ல் இருந்து ரூ.167 ஆக உயர்த்தி மத்திய அரசு அறிவித்தது. இதற்கு ஜார்கண்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மத்திய அரசு ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் வெறும் ரூ.5 உயர்த்தி எங்களை அவமதித்துள்ளது. எனவே அந்த ரூ.5 மத்திய அரசுக்கு நாங்கள் தருகிறோம் என லதேகார் பகுதியை சேர்ந்த நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். ரூ.5ஐ பிரதமர் மோடியின் அலுவலகத்திற்கு தபாலிலும் அனுப்பி வைக்கும் போராட்டத்தையும் நடத்தினர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், மற்ற மாநிலங்களில் ஊரக வேலை திட்டத்தில் கூடுதல் கூலி கொடுக்கும் போது ஜார்கண்டில் மத்திய அரசின் இந்த அறிவிப்பு எங்களை அவமதிப்பது போல உள்ளது. கடுமையான வறட்சி சூழலில் இந்த கூலியை கொண்டு ஒரு குடும்பத்தை எவ்வாறு காப்பாற்றுவது என்று அப்பகுதி மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.கடந்த 3 மாதங்களாக ஊரக வேலை திட்டத்தில் கூலி வழங்கப்படாமல் நிலுவையில் இருப்பதாகவும், உ டனடியாக இதை வழங்க மத்திய அரசு நிதி ஒதுக்க வேண்டும் என கடந்த மார்ச் மாதம் முதல்வர் ரகுபர்தாஸ் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருந்தார். பல்வேறு கோரிக்கைகளுக்கு பிறகு ரூ.5 மத்திய அரசு உயர்த்தி அறிவித்தது. தற்போது ஜார்கண்டில் இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.