6வது தோல்வியை சந்தித்தது புனே பேட்டிங்கில் தடுமாறி விட்டோம் டோனி விரக்தி
5/2/2025 2:10:48 PM
புனே: ஐபிஎல் தொடரின் 29வது லீக் போட்டி, புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நேற்று இரவு நடந்தது. ரைசிங் புனே சூப்பர் ஜயண்ட்ஸ்-மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இதன் பின் முதலில் களமிறங்கிய புனே அணி 20 ஓவர்களில், 5 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்தது. சவுரப் திவாரி 57 (45 பந்துகள், 4 பவுண்டரி, 2 சிக்சர்), ஸ்டீவன் ஸ்மித் 45 ரன் (23 பந்துகள், 4 பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்தனர். மும்பை தரப்பில் பும்ரா 3, மெக்கிளனகன், ஹர்பஜன் சிங் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். இதன்பின் களமிறங்கிய மும்பை அணி 18.3 ஓவர்களில், 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து, 161 ரன் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது. கேப்டன் ரோகித் சர்மா 85 (60 பந்துகள், 8 பவுண்டரி, 3 சிக்சர்), ஜோஸ் பட்லர் 27 ரன் (17 பந்துகள், 2 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர். புனே தரப்பில் டிண்டா, ரவிச்சந்திரன் அஸ்வின் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். மும்பை கேப்டன் ரோகித் சர்மா ஆட்டநாயகன் விருது வென்றார். 8வது போட்டியில் விளையாடிய புனே 6வது தோல்வியையும், 9வது போட்டியில் விளையாடிய மும்பை 5வது வெற்றியையும் பதிவு செய்தது.
வெற்றி குறித்து மும்பை கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில், இது நல்ல உழைப்பு என நான் நினைக்கிறேன். இருந்தாலும் நாங்கள் எதிர்பார்த்தபடி போட்டியை துவக்கவில்லை. மேலும் நாங்கள் பீல்டிங்கில் தடுமாறி விட்டோம். கேட்ச்சுகளை தவற விடுவது நல்ல விஷயம் அல்ல. ஆனால் புனே அணியை 160 ரன்களுக்குள் சுருட்டியது நல்ல உழைப்பு. ஸ்பின்னர்களும், வேகப்பந்து வீச்சாளர்களும் மிடில் ஓவர்களில் சிறப்பாக பந்து வீசினர். பும்ராவும், மெக்கிளனகனும் டெத் ஓவர்களில் அருமையாக பந்து வீசினர். டாஸ் வெற்றி பெறுவது நமது கைகளில் இல்லை. ஆனால் சேசிங் ெசய்யும்போது, டார்கெட் நமக்கு முன்பே இருக்கும். இதனால் திட்டமிட்டு செயல்பட முடியும். நாங்கள் சரியான பாதையில் பயணித்து கொண்டிருக்கிறோம். ஆனால் பீல்டிங்கில்தான் முன்னேற்றம் காண வேண்டும் என்றார்.
இதனிடையே மும்பை அணியின் ஹர்பஜன் சிங்கும், அம்பதி ராயுடுவும் நேற்று களத்தில் மோதி கொண்டனர். ஒரே அணி வீரர்கள் களத்தில் மோதி கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து ேராகித் சர்மா கூறுைகயில், இருவருமே களத்தில் ஆக்ரோஷமாக செயல்படக்கூடியவர்கள். மும்பை இந்தியன்ஸ் அணிக்காக நீண்ட காலமாக இருவரும் ஒன்றாக விளையாடி வருகிறார்கள். புனே அணியின் ஹேண்ட்ஸ்கோம் விக்கெட்டை ஹர்பஜன் வீழ்த்தியபோது, ராயுடுவும், அவரும் கட்டி தழுவி கொண்டதையும் காண முடிந்தது. இருவரும் முதிர்ச்சியடைந்த கிரிக்கெட் வீரர்கள். களத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது அவர்களுக்கு தெரியும் என்றார்.தோல்வி குறித்து புனே கேப்டன் டோனி கூறுகையில், பத்தாவது ஓவருக்கு பிறகு நான் உள்பட அனைவரும் நன்றாக பேட்டிங் செய்யவில்லை. விக்கெட்டுகளை அதிகமாக இழந்து விடுவோமோ என அந்த நேரத்தில் நினைத்து விட்டோம். அதே நேரத்தில் பவுலிங் முன்னேற்றம் கண்டுள்ளது. அடுத்த போட்டியில் இருந்து, இன்னிங்ஸ் முழுவதும் நின்று விளையாடக்கூடிய பொறுப்பை சில வீரர்களிடம் அளிக்க இருக்கிறோம் என்றார்.