தீவு திடலில் ஜெ. பொதுக்கூட்டத்தில் கட் அவுட், பேனர் வைத்த அதிமுகவினர் மீது வழக்கு ஐகோர்ட்டில் தேர்தல் அதிகாரி தகவல்
4/20/2016 3:24:38 PM
சென்னை: தீவு திடலில் ஜெயலலிதா பிரசார பொதுக் கூட்டம் நடந்த போது, தேர்தல் விதிமுறைகளை மீறி பேனர் வைத்ததற்காக அதிமுகவினர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். சென்னை ஐகோர்ட்டில் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி ஒரு பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார். அதில், ‘‘சென்னை தீவு திடலில் கடந்த 9ம் தேதி அதிமுக பிரசார பொதுக்கூட்டம் நடந்தது. இதில் முதல்வர் ஜெயலலிதா கலந்து கொண்டு பேசினார். இதற்காக பல இடங்களில் விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டன.
இது தேர்தல் நடத்தை விதிகளுக்கும், சென்னை ஐகோர்ட்டின் உத்தரவுக்கும் எதிரானவையாகும். இது பற்றி தலைமை தேர்தல் அதிகாரியை கடந்த 8ம் தேதியே போனில் தொடர்பு கொண்டு புகார் செய்தேன். பின்னர், விதிகளை மீறி பேனர்கள் வைத்ததற்காக தேர்தல் சின்னம் விதிகளின்படி, அதிமுக சின்னமான இரட்டை இலையை முடக்க வேண்டும் என்று கடந்த 10ம் தேதி மனு அனுப்பினேன். இந்த மனுவை பரிசீலித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கு, தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் முன்பு கடந்த 13ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘‘விதிகளுக்கு முரணாக விளம்பர பேனர்கள், கட்அவுட்கள் வைக்கப்பட்டதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?’’ என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பியிருந்தனர். இந்த வழக்கு அதே நீதிபதிகள் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தலைமை தேர்தல் அதிகாரி சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘‘கடந்த 9ம் தேதி தீவுத்திடலில் அதிமுக தேர்தல் பிரசார கூட்டம் நடந்தது. இந்த கூட்டம் நடத்துவதற்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. பொது இடங்களில் பேனர்கள் வைக்க அனுமதி வழங்கவில்லை. இது குறித்து புகார் வந்ததும், பேனர்களை அகற்ற சம்பந்தப்பட்ட கட்சியினரிடம் அதிகாரிகள் உத்தரவிட்டனர். அவர்களும் கடந்த 8ம் தேதி இரவு அவற்றை அகற்றினர். ஆனால், தீவுத்திடல் அருகேயுள்ள சாலைகளில் பேனர்கள் அகற்றப்படவில்லை. இது ெதாடர்பாக அதிமுக நிர்வாகிகள் மீது கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்’’ என்று கூறியுள்ளார்.