அதிகாரிகள் எழுந்து நின்று வேட்பு மனு வாங்க கூடாது தேர்தல் கமிஷன் உத்தரவு
4/16/2016 12:19:24 PM
திருவள்ளூர்: ‘அரசியல்வாதிகளிடம் எழுந்து நின்று வேட்பு மனு வாங்க கூடாது’ என அதிகாரிகளுக்கு தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், வேட்பு மனு தாக்கல் செய்ய வரும்போது, தேர்தல் அதிகாரி, துணை தேர்தல் அதிகாரிகளிடம் விருப்பு, வெறுப்பின்றி நடந்து கொள்ள வேண்டும். அதுபோன்று தேர்தல் அதிகாரிகளும், மனு தாக்கல் செய்யும் அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள், சுயேட்சை வேட்பாளர்கள் என அனைவரையும், கட்சிகளுக்கு அப்பாற்பட்டு ‘வேட்பாளராக’ தான் பார்க்க வேண்டும். அவர்களை ஒரே மாதிரியாகத்தான் நடத்த வேண்டும். அரசியல் கட்சியின் மிக முக்கிய பிரமுகராக இருந்தாலும், அவரிடம் மரியாதை நிமித்தம் என கூறி, தனிப்பட்ட முறையில் பேச கூடாது. எழுந்து நின்று வரவேற்க கூடாது. அமர்ந்த நிலையில் தான், அவரிடம் வேட்பு மனுவை பெற வேண்டும் என தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளதாக, தேர்தல் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.