ஸ்டாலின், ஜெ. சென்னையில் போட்டி போட்டு பிரசாரம் தேர்தல் களம் சூடு பிடித்தது திமுக தேர்தல் அறிக்கை நாளை வெளியீடு
4/9/2025 12:36:08 PM
சென்னை: சென்னையில் ஸ்டாலின், ஜெயலலிதா போட்டி போட்டு பிரசாரம் செய்வதால் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. திமுக சார்பில் நாளை தேர்தல் அறிக்கை வெளியீடும், ஓரிரு நாளில் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட இருப்பதும், மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த மாதம் 16ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. வேட்புமனு தாக்கல் வருகிற 22ம் தேதி தொடங்குகிறது. வேட்புமனு தாக்கலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், தமிழகத்தில் அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடு, வேட்பாளர் பட்டியல், பிரசாரம் என தேர்தல் பணிகளை வேகப்படுத்தி வருகின்றன.தமிழக தேர்தல் களத்தில் இரண்டு பெரிய கட்சிகளான திமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகள் கூட்டணிகளுக்கான தொகுதி பங்கீட்டை ஓரளவுக்கு முடித்துவிட்டு அடுத்த கட்டமான வேட்பாளர் பட்டியல், தேர்தல் பிரசாரம் என வேகமாக செயல்பட்டு வருகின்றனர். அதன்படி திமுக சார்பில் அதன் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, புதிய தமிழகம், சமத்துவ படை, விவசாயிகள் கட்சிகளுக்கு சீட் ஒதுக்கீடு பணிகள் சுமூகமாக முடிந்துள்ளது.
இதையடுத்து, திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் நேற்று ஆர்.கே.நகர், கொளத்தூர் தொகுதியில் தேர்தல் பிரசாரத்தையும் தொடங்கினார். அதிமுக அரசுக்கு எதிராகவும், ஜெயலலிதாவுக்கு எதிராகவும் வீடு, வீடாக துண்டு பிரசுரங்களை வழங்கினார். இந்நிலையில் இரண்டாவது நாளாக திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் இன்று ஆயிரம் விளக்கு தொகுதியில் உள்ள மக்கிஸ்கார்டன் பகுதியில் காலை 10 மணி முதல் 10.30 வரை கொளுத்தும் வெயிலில் வீடு, வீடாக சென்று பொதுமக்களை சந்தித்து துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்து திமுகவுக்கு வாக்களிக்குமாறு கேடடுக்கொண்டார். அவருக்கு பொதுமக்கள் உற்சாக வரேவற்பு அளித்ததுடன், தேர்தலில் எங்கள் ஒட்டு திமுகவுக்கு தான் என்று மு.க.ஸ்டாலினிடம் உறுதியளித்தனர். ஸ்டாலினின் இந்த திடீர் வருகையால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. ‘’முடங்கியது தமிழகம், மூழ்கியது தமிழக அரசு’’’’, ‘’சொன்னாங்களே செஞ்சாங்களா’’’’ ஆகிய தலைப்பில் அச்சிடப்பட்ட துண்டு பிரசுரங்களை ஸ்டாலின் மக்களிடம் கொடுத்தார். அதில் சிகினா வாக்குறுதிகளும், 110 விதியின் வெட்டு வேத்து அறிவிப்புகள் என்று பட்டியலிபடப்பட்டிருந்தது.
நிகழ்ச்சிக்கு பின்னர் நிருபர்களிடம் மு.க.ஸ்டாலின் கூறியதாகவது:நமக்கு நாமே பயணம் போல மக்களை சந்தித்து ஆதரவு திரட்ட நான் இங்கு வந்துள்ளேன். இது திட்டமிட்ட பயணம் அல்ல. இனி மக்களை தேடி அரசியல்வாதிகள் வரவேண்டுமே தவிர அரசியல்வாதிகளை தேடி மக்கள் செல்ல வேண்டியதில்லை என்பதை உணர்த்தவே இந்த பயணம் என்றார். பின்னர் கோபாலபுரம் இல்லத்துக்கு வந்தார். நிருபர்கள் அவரிடம், நேற்று செய்த தெருமுனை பிரசாரம் எப்படி இருந்தது என்று கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த மு.க.ஸ்டாலின், ‘‘ஆர்.கே.நகர் மக்கள் ஜெயலலிதாவை தோற்கடிக்க வேண்டும் என்ற மனநிலையில் உள்ளனர். தெருமுனை பிரசாரங்களை பரவலாக செய்வது என்று நாங்கள் முடிவு எடுத்து அதை நான் ஆர்.கே.நகரில் நேற்று தொடங்கி வைத்தேன். நேரம் கிடைக்கும்போது அந்த பணியை செய்வேன்’’ என்றார்.
நாளை திமுக தேர்தல் அறிக்கை வெளியிடப்படும் என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாளையே தினமே திமுக தலைவர் கருணாநிதி, மு.க.ஸ்டாலின் ஆகியோரின் தேர்தல் பிரசார தேதியும் வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது.அடுத்த பெரிய கட்சியான அதிமுகவும், தமிழகத்தில் 227 இடங்களில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை கடந்த 4ம் தேதி ஜெயலலிதா அறிவித்தார். அன்றைய தினமே 6 கூட்டணி கட்சிகளுக்கான 7 தொகுதிகளையும் ஒதுக்கீடு செய்தார். அதிமுக கூட்டணியில் தமாக, தமிழக வாழ்வுரிமை கட்சி உள்ளிட்ட மேலும் சில கட்சிகள் சேரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், வேறு கட்சிகளுக்கு அதிமுக கூட்டணியில் ஜெயலலிதா சீட் கொடுக்கவில்லை.
இதனால் இதுவரை அதிமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து வந்த மூவேந்தர் முன்னேற்ற முன்னணி கட்சி தலைவர் சேதுராமன் உள்ளிட்ட சில கட்சியினர் அந்த கூட்டணியில் இருந்து வெளியேறினர்.இதையடுத்து அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா இன்று முதல் தேர்தல் பிரசாரத்தையும் தொடங்குகிறார். அதன்படி, சென்னை தீவுத்திடலில் இன்று மாலை 6 மணிக்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் ஜெயலலிதா பேசுகிறார். இந்த கூட்டத்தில் அதிமுக தேர்தல் அறிக்கையையும் ஜெயலலிதா வெளியிடுவார் என்று கூறப்படுகிறது. பொதுக்கூட்டத்தில் 20 தொகுதி வேட்பாளர்களையும் ஜெயலலிதா அறிமுகப்படுத்துகிறார். அதைத்தொடர்ந்து தமிழகத்திலும் முக்கிய 13 இடங்களிலும், புதுச்சேரியில் ஒரு இடத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்திலும் ஜெயலலிதா பேசுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு கூட்டத்திலும், அந்தந்த மாவட்டத்தில் உள்ள 15 முதல் 20 வேட்பாளர்களை அறிமுகப்படுத்துவார்.முன்னதாக, இன்று காலை 10 மணிக்கு தமிழகம் முழுவதும் உள்ள 226 தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளர்கள் கோயிலில் சாமி கும்பிட்டு விட்டு, தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்து பிரசாரத்தை தொடங்க வேண்டும் என்றும் தலைமை உத்தரவிட்டுள்ளதால், அதிமுக வேட்பாளர்கள் அனைவரும் இன்று முதல் பிரசாரத்தை தொடங்கி விட்டனர்.கேப்டன் நலக் கூட்டணி சார்பில் நாளை மாமண்டூரில் பிரச்சார பொதுக் கூட்டம் நடக்கிறது. அதில் தொகுதி பங்கீடு முடியாததால் சில வேட்பாளர்கள் கொண்ட பட்டியல் வெளியிடப்படுகிறது. தேமுதிக அதிருப்தி நிர்வாகிகள் நாளை சிறப்பு பொதுக்குழுவை கூட்டுகின்றனர். இது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு தமிழக அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தை தொடங்கி விட்டதால் அரசூயல் களம் சூடுபிடித்துள்ளது. திமுகவில் வேட்பாளர்கள் ஓரிரு நாளில் அறிவிக்கப்படுகின்றனர். அதன்பின் தேர்தல் களத்தில் அனல்பறக்கும் என்று எதிர்பார்க்கிறது.