சிரியாவில் 300 தொழிலாளர்களை கடத்திய ஐஎஸ் தீவிரவாதிகள் மீட்க தீவிர நடவடிக்கை
4/8/2025 2:45:04 PM
பெய்ரூட்: சிரியாவில் சிமென்ட் தொழிற்சாலையில் பணிபுரிந்து கொண்டிருந்த சுமார் 300 தொழிலாளர்களை, ஐஎஸ் தீவிரவாதிகள் கடத்தி சென்றனர். அவர்களை மீட்க அந்நாட்டு ராணுவம் நடவடிக்கை எடுத்துள்ளது.சிரியாவில் உள்ள தமாஸ்கஸ் நகர் அருகேயுள்ள ஒரு சிமென்ட் தொழிற்சாலையில் நேற்று தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தபோது, திடீரென ஐஎஸ் தீவிரவாதிகள் உள்ளே புகுந்தனர். இதை கண்டு அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்நிலையில், துப்பாக்கி முனையில் மிரட்டி சுமார் 300 தொழிலாளர்களை கடத்தி சென்றனர்.
கடத்தப்பட்டவர்களை டுமெயர் என்ற இடத்துக்கு தீவிரவாதிகள் கொண்டு சென்றதாகவும், தொழிலாளர்களை தொடர்புகொள்ள முடியாத நிலை உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடத்தப்பட்ட தொழிலாளர்களை மீட்க சிரியா ராணுவம் நடவடிக்கை எடுத்துள்ளது. சிரியாவில் தற்போது உள்நாட்டு போர் தீவிரமடைந்து வருகிறது. ஐஎஸ் தீவிரவாதிகள் பிடித்து வைத்திருந்த பகுதிகளை, சிரியா ராணுவம் மீட்டு வருகிறது. அமெரிக்கா, ரஷ்யா உதவியுடன் தீவிரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வரும் இடங்களில் ராணுவம் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. தீவிரவாதிகளுக்கு பின்னடைவு ஏற்பட்டு வரும் நிலையில், தொழிலாளர்களை கடத்தி சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.